கோவை : இருதயத்தில் கத்தி குத்துடன் வந்த நபரை காப்பாற்றி, கோவை அரசு மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.கோவை, செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர் நெஞ்சில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த, 25ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.
மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் காயங்கள், இதயத்தை சுற்றி ரத்தம் உறைந்து கட்டியாக மாறி, இடது பக்க இதயத்தின் வேலைபாட்டை குறைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள், இருதய அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையின் போது, அவரின் வலது பக்க இதயத்தில் குத்து காயம் இருப்பதும், அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.பின்னர், மருத்துவர்கள் ரத்த கட்டை அகற்றி, ரத்தம் கசிந்த பகுதியை தையல் போட்டு சரி செய்தனர்.
ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டதால், சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைவாக இருந்தது. இதனால், அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றினர்.தற்போது நோயாளி நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி, நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு தலைவர் கருப்பசாமி, இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்களை, மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினார்.