தமிழக நிகழ்வுகள்:
மாதர் சங்கத் தலைவி கணவருடன் தற்கொலை
மதுரை, :மதுரையில், குடும்ப பிரச்னையில், கணவருடன் விஷம் குடித்து, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவி தற்கொலை செய்து கொண்டார்.மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 65; ஆடியோ சென்டர் உரிமையாளர். இவரின் மனைவி ராஜேஸ்வரி, 60; ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இறந்து விட, இளைய மகன் பொன்னகரம் பாஸ்டின் நகரில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார்.சில நாட்களாக மகன் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால்
கந்தசாமியும், ராஜேஸ்வரியும் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். நேற்று முன்தினம் மகன் வீட்டிற்கு வந்தவர்கள், அங்கு விஷம் குடித்து அருகேயுள்ள புட்டுத்தோப்பு சிவன் கோவிலுக்கு சென்று மயங்கினர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று காலை அடுத்தடுத்து இருவரும் இறந்தனர். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
![]()
|
துப்பாக்கியால் சுட்டுபோலீஸ்காரர் தற்கொலை
சிதம்பரம் :சிதம்பரத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் பெரியசாமி, 28; கடலுார் ஆயுதப்படை போலீஸ்காரர்.
பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில், கடந்த 6ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, இவரும், சிதம்பரம் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் என்பவரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அதிகாலை 5:00 மணிக்கு, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, ராஜ்குமார் ஓடிவந்து பார்த்தார். அப்போது, பெரியசாமி கையில் வைத்திருந்த, '303' ரக துப்பாக்கியால் தன் கழுத்தில் வைத்து சுட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து
கிடந்தார்.அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், சிதம்பரம் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி., சக்திகணேசன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அந்த போலீஸ்காரர் உடல், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரியசாமிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் ஜூன் 10ல் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
திருமண ஏற்பாட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.பெரியசாமியின் தங்கை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
*************
இந்திய நிகழ்வுகள்
மலையில் சிக்கித் தவித்த 2 பேர்எல்லை காவல் படையினரால் மீட்பு
பிதோராகார்க் :உத்தரகண்ட் மலையில், 48 மணி நேரம் சிக்கித் தவித்த மலையேறும் வீரர்கள் இரண்டு பேரை, இந்தோ - திபெத்திய எல்லை காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிதோராகார்க் மாவட்டத்தில், 12,000 அடி உயர கலியா டாப் என்ற மலை உள்ளது. இதற்கு, மலையேறும் வீரர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விஷால் கங்வார், 27, மற்றும் சந்தோஷ் குமார், 30, இருவரும், 15ம் தேதி இந்த மலையில் ஏறத் துவங்கினர்.
மலையில் 7 கி.மீ., துாரத்தை கடந்த பின், பிர்த்தி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றபோது வழி தவறியதால், மலையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். பின், 'மொபைல் போனை' பயன்படுத்தி, தங்களை காப்பாற்ற உதவி கோரினர்.
இதையடுத்து, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படையினர், இரண்டு குழுக்களாக பிரிந்து, அவர்களை மீட்கும் பணிகளில்
ஈடுபட்டனர்.இந்நிலையில், 48 மணி நேரம் மலையில் சிக்கித் தவித்த அவர்கள் இருவரையும், நேற்று முன்தினம் இரவு, ஐ.டி.பி.பி., படையினர் பத்திரமாக
மீட்டனர். அவர்கள் பசியில் இருந்ததால், அவர்களுக்கு முதலில் உணவு வழங்கப்பட்டது.அந்தப் பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடியாததால், தரைப்பாதையில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
சரத் பவாரை விமர்சித்தநடிகை சிறையில் அடைப்பு
தானே :தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை விமர்சனம் செய்த நடிகையை, ஜூன் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தானே நகரில் வசிக்கும் மராத்தி நடிகை கேதகி சிதலே, 29, சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், 80, குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து, தானே போலீசார் வழக்கு பதிவு செய்து, கேதகியை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த கேதகி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜூன் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி
உத்தரவிட்டார்.நடிகையின் பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கல்லுாரி மாணவர் நிகில் பாம்ரே, 23, என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
*************************
உலக நிகழ்வுகள்
வட கொரியாவில் பரவும் கொரோனா புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல்
சியோல்: வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது.
உலகம் முழுதும் 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக, அந்நாடு அறிவித்துள்ளது.
மக்கள் பீதி
நேற்று, புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்; ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதையடுத்து, 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகள் இல்லைஎனவே, பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேருக்கு, கொரோனா தொற்று உள்ளது என்பது இதுவரை தெரியவரவில்லை.இதேபோல, அங்கு கொரோனா தடுப்பூசிகள் இல்லாததும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, சீனாவும், தென் கொரியாவும் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தன.எனினும், அவற்றை ஏற்க, வட கொரியா மறுத்தது. தற்போது மீண்டும், தடுப்பூசி வழங்க தென் கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை, வட கொரியா ஏற்காமல் இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE