சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை விற்பனையும், வாடகை மதிப்பும் சரிந்துள்ளதால், புதிய குடியிருப்பு திட்டங்களை துவக்க, கட்டுமான நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வீடு, மனை விற்பனைக்கு எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். இதனால், நாடு முழுதும் ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சி அடைந்தாலும், சென்னையில் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது.தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியேறுவது வழக்கம். இதனால், புதிதாக வீடு, மனை விற்பனை யில் எப்போதும் ஒரு போட்டி இருக்கும்.
இந்தப் போட்டியால், கட்டுமான நிறுவனங்கள், வீடுகளின் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ரியல் எஸ்டேட் வளர்ச்சி விகிதம் ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
ஊரடங்கு
கடந்த, 2020ல் கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கட்டுமான திட்ட பணிகள் தொடர்ந்து பல மாதங்கள் முடங்கின. வெளி மாநிலங்களில் இருந்து, கட்டுமான பணியாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை தொழிலாளர் வருகையும், கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், தற்போது சென்னையில் வீடு, மனை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட, 5 சதவீத விலை உயர்வு தடைபட்டு
உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல, புதிய திட்டங்கள் வருகையிலும், கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீடு விற்பனையில் சிக்கல்
இது குறித்து, தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை விற்பதிலேயே கட்டுமான நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
அடுக்குமாடி திட்டங்களில், கட்டுமான செலவு, நிலத்துக்கான செலவு சேர்த்து, 1 சதுர அடி, 5,500 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், 4,700 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
முதலீடு முடங்கி கிடப்பதால் ஏற்படும் வட்டி செலவு, மீண்டும் ஊரடங்கு போன்ற பிரச்னைகள் வந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், கட்டுமான நிறுவனங்கள் இப்படி விற்பனை
செய்கின்றன. அதே நேரத்தில், மூன்று படுக்கை அறை வீடுகளுக்கு, கேட்பு அதிகமாக உள்ளதால், அவற்றின் விலை மாறவில்லை.சென்னையின் பல்வேறு பகுதிகளில், காலி நிலங்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில், நிலத்தின் சந்தை விலை, 2020 நிலையிலேயே தொடர்கிறது.
இதில் உயர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அதிக விலைக்கு விற்பனை நடப்பதில்லை.இது போன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட் சந்தையில் ஒருவித தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டு மக்கள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், பொருளாதார வளர்ச்சியில் இன்னும் இயல்புநிலை ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டங்கள் சரிவு
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சென்னையில், புதிய குடியிருப்பு திட்டங்களுக்கு அனுமதி கோரி, 1,300 விண்ணப்பங்கள் வரும் இடங்களில் தற்போது, மாதம் 700
விண்ணப்பங்கள் தான் வருகின்றன.
பெரிய குடியிருப்பு
திட்டங்கள் தொடர்பாக சி.எம்.டி.ஏ.,வுக்கு வரும் விண்ணப்பங்களும் வெகுவாக குறைந்துள்ளன.வட்டி உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், பெரும்பாலான நிறுவனங்கள் புதிய திட்டங்களை துவக்க தயக்கம் காட்டுகின்றன.
இதனால், ஒட்டுமொத்த நிலையில் விற்பனை சரிந்து விலை உயர்வு தடைபட்டுள்ளது.புதிய திட்டங்களில் விற்பனை பதிவுக்கு, ரியல் எஸ்டேட் ஆணைய சான்று கட்டாயமாகி உள்ளது. ஆனால் சான்று கோரி விண்ணப்பித்தவர்கள் பல மாதங்களாக காத்திருக்க வேண்டியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களில், 5 சதவீத விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்த்து விட்டது. இதனால் ஒருவித தேக்கநிலை காணப்படுகிறது.
சென்னை பெருநகரில் ரியல் எஸ்டேட் சந்தையில், விலை உயர்வு இருப்பது போன்ற செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், எதார்த்த நிலையை ஒப்புக்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, வணிக வளாகங்களில் வாடகைக்கு விடுவதற்கான, 'டுலெட்' அறிவிப்பு பலகைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. சென்னையில் புதிதாக குடியேறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது:கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள், கணினி சார்ந்த பணிகளில் ஈடுபடுவோரை, 'ஒர்க் பிரம் ஹோம்' என்று கூறி, வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தின.
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையிலும், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த பல நிறுவனங்கள், இந்த முறையிலேயே செயல்படுகின்றன.
இதனால், ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களில், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியவர்கள், தற்போது சொந்த ஊர்களில் இருந்து பணிபுரிகின்றனர். இதனால், வாடகை வீடுகளுக்கான கேட்பு மற்றும் தேவை குறைந்து
உள்ளது.பணியாளர்களை வீட்டில் இருந்து, வேலை செய்ய அறிவுறுத்திய நிறுவனங்கள், அலுவலக பயன்பாட்டு இடங்களையும் குறைத்து விட்டன. இதனால், சென்னையில் வீடு, வணிக நிறுவனங்களில், டுலெட் போர்டுகள் அதிகரித்துள்ளன.
சில இடங்களில் தொடர்ந்து பல மாதங்களாக, டுலெட் போர்டுகள் தொங்குவது வழக்கமாகி உள்ளது.பொருளாதார இயல்பு நிலை வரும்போது தான், இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக, பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், நிலம் வாங்குவது, மனைகள் விற்பனை என இறங்கிவிட்டன. இதிலும், சந்தையில் கூறப்படும் விலையை விட குறைந்த விலைக்கு கொடுக்க, உரிமையாளர்கள் முன்வரும் இடங்களில் மட்டுமே விற்பனை நடக்கிறது.
நகரின் மையப் பகுதிகளில், நிலத்தின் விலை சதுர அடி 20 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்ட இடங்களில், 15 ஆயிரம் ரூபாய்க்கு நிலம் விற்கப்படுகிறது. ஒரு கிரவுண்ட் நிலம், 6 கோடி ரூபாய் என்று கூறப்படும் பல இடங்களில், 3 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
அவசர நிதி தேவை உள்ளவர்கள் மட்டுமே, தற்போதைக்கு நிலங்களை விற்பனை செய்கின்றனர். மற்றவர்கள் நிலத்தின் விலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக உள்ளனர்.
குறிப்பாக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், புதிய சொத்துக்களை வாங்குவதில் தயக்கம் காட்டுவது, பின்னடைவாக உள்ளது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்தால் தான், அதில் முன்னேற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE