வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நடப்பு நிதியாண்டில் பல்வேறு திட்டங்களுக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட, 8,000 கோடி ரூபாயை விட இரண்டரை மடங்கு அதிகம்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா கூறியதாவது:
'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ், 5.35 லட்சம் கோடி ரூபாய் செலவில், 34 ஆயிரத்து 800 கி.மீ., நீள நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதில், 8,300 கி.மீ.,க்கு 22 விரைவு நெடுஞ்சாலைகள், 3.60 லட்சம் கோடி ரூபாய் திட்ட செலவில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு குறையும்.

இதுவரை, 1,540 கி.மீ., நெடுஞ்சாலைகளில், 21 சுங்கச் சாவடிகளை அமைத்து பராமரித்து குறித்த காலத்திற்கு பின் அரசிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், நெடுஞ்சாலை திட்டங்களுக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE