பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களை தமிழக கல்வி துறை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வட மாவட்டங்களைச் சேர்ந்தவை. இந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, சிறப்பு திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
வட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை தான்... அதனால தான், சில கட்சிகள் அங்க மட்டும் செல்வாக்கா இருக்கிறதோ?
பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: பெரும்பாலான தி.மு.க., அமைச்சர்களின் மகன்கள் எம்.பி.,க்களாக உள்ளனர். அதேபோல் உறவினர்கள், மாநில அரசில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர். தி.மு.க.,வின் அடிப்படையே வாரிசு அரசியல். அது, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து தற்போதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் ஒழியாத வரை, வாரிசு அரசியலுக்கு எக்காலத்திலும் முடிவு கட்டவே முடியாது!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் ஆறுமுகம், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ் நடத்துனர் பெருமாள், மது போதையில் இருந்த பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பணியாளர்கள் தாக்கப்படுவது, தொடர் கதையாக இருக்கிறது. இதுபோன்ற தாக்குல் நடத்துவதை நிறுத்த, போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
அட, நீங்க ஒண்ணு... போலீசார் மேலயே குண்டு வீசிட்டு ஓடுறாங்க... இதுல, அவங்களை வச்சு பாதுகாப்பு கேட்குறீங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: பகுத்தறிவு பேசும் தி.மு.க., ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை, பவுர்ணமி நாளில் அறிவித்துள்ளது. ஓராண்டு தி.மு.க., ஆட்சியில், நாங்கள் ஹீரோவாகவும், தி.மு.க.,வினர் ஜீரோவாகவும் உள்ளனர்.

யார் ஜீரோ, ஹீரோன்னு தெரியாது... ஆனா, உங்க அக்கப்போர்ல, காமெடியன்கள் ஆகுறது தமிழர்கள் தான்!
தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம்: தென் தமிழகத்தில் கோவில்பட்டி ஒரு முதன்மையான வணிக நகரம். நுாற்பாலைகள், சிறுகுறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற பொருட்கள் நாடு முழுதும் இங்கிருந்து செல்கின்றன. தினமும், 30 ரயில்கள் செல்கின்றன. சில ரயில்கள் நிற்பது இல்லை. அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகள் எம்.பி.,யா இருந்தீங்க; இப்பவும் இருக்கீங்க... சில நேரங்களில் மத்திய அமைச்சரவையிலும் உங்க கட்சி அங்கம் வகித்ததே... அப்ப எல்லாம், இந்த பிரச்னையை தீர்க்காமல் என்ன செய்தீங்க?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE