நீருக்கடியில் பதுங்கும் சிலந்தி
பிரிட்டனிலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மெக்சிகோவில் நீர் நிலைக்கு அருகே வாழும் ஒரு சிலந்தி இனத்தின் வினோத பழக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிலந்தி, எதிரிகளிடமிருந்து தப்பிக்க, நீரில் மூழ்குகிறது. அப்போது அதன் உடல் மீதுள்ள நுண் முடிகள், நீரை உடல் மீது ஒட்டாமல் விலக்குகின்றன.
இதனால் சிலந்தியின் உடல் மீது காற்றுப் படலம் உருவாகிறது. இப் படலம் சிலந்தியின் உடல் வெப்பத்தை காப்பாற்றி, சுவாசத் துளைகளுக்குள் நீர் போகாமல் தடுக்கிறது. இதனால் சிலந்தியால் அரைமணிக்கு மேல் தண்ணீருக்கு அடியில் இருக்க முடிகிறது.
மரப் பட்டைகளை ஒட்டும் புதிய பசை
இயற்கை மரங்களிலிருந்து தயாரிக்கப்படும், பிளைவுட் எனப்படும் ஒட்டுப் பலகைகள் இன்று பரவலாகிவிட்டன. பிளைவுட்டில், ஒட்ட உதவும் பார்மால்டிஹைட் அடிப்படையிலான பிசின்கள், நச்சு வாயுக்களை கசியவிடுபவை. இதற்கு மாற்றாக, சிட்ரிக் அமிலம் மற்றும் குளுகோஸ் கலவையை உருவாக்கியுள்ளனர் சீனாவின் தெற்கு காட்டுயிர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
அதிக அளவு சிட்ரிக் அமிலம்- சிறிதளவு குளுகோஸ் கொண்ட கலவையை மரப் பட்டைகளுக்கிடையில் பூசி, அவற்றை 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வைத்து, ஆறு நிமிடங்கள் அழுத்தினால், வலுவான பிளைவுட் கிடைப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு படைத்த புரதம்
உலக அளவில் சேரும் திடக் கழிவில், 12 சதவீதம் 'பெட்' வகை பிளாஸ்டிக்தான். பெட் பிளாஸ்டிக்குகளை வேகமாக சிதைத்து, கரைக்கும் என்சைம்களை, அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த என்சைம், தற்போதுள்ள பிளாஸ்டிக் சிதைப்பு முறைகளைவிட இரண்டு மடங்கு வேகமாக சிதைக்கும் திறனுள்ளது. அதுவும், 51 வகையான பெட் பாட்டில்கள், பெட்டிகள் மற்றும் கலன்களை இந்த என்சைம் கரைத்துவிடும்.
பிளாஸ்டிக்கை வேகமாக கரைக்கும் திறனுள்ள புரதங்களைக் கொண்ட, என்சைம் திரவத்தை உருவாக்குவதில், விஞ்ஞானிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியது.
ஆகாயத் தபால்
பிரிட்டனிலுள்ள அஞ்சல் சேவையான யு.கே. ராயல் மெயில், விரைவில் ட்ரோன்கள் வாயிலாக தபால்களை முகவரிதாரர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கென, லண்டனிலுள்ள ஆளில்லா பறக்கும் வாகனத் தயாரிப்பாளரான விண்ட்ரேசர்சிடமிருந்து 200 புதிய ட்ரோன்களை ராயல் மெயில் வாங்கவிருக்கிறது.
ஒரு ட்ரோனால், 100 கிலோ எடைஉள்ள தபால்களை அலேக்காக துாக்க முடியும். தபால்காரரை அனுப்பக் கட்டுபடியாகாத, தொலைதுார முகவரிகளுக்கு ட்ரோன் சேவை உதவும். முதல் கட்டமாக, 50 வழித்தடங்களில் ட்ரோன் அஞ்சல் சேவை துவங்கப் போகிறது ராயல் மெயில்.