வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பேரறிவாளன் விடுதலையை திமுக.,வினர் கொண்டாடிவரும் சூழலில், காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வாயில் துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பரோலில் விடப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று (மே 18) விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்டு விடுதலை பெற்றுத் தந்ததாக திமுக.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ பேரறிவாளன் விடுதலையை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது.
இதன் வெளிப்பாடாக தமிழகம் முழுவதும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க கூடாது என்ற நோக்கில் காங்., கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கூட்டணியில் பேரறிவாளன் விடுதலையில் இருவேறு கட்சிகளும் வெவ்வேறு நிலைபாட்டில் இருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் திமுக.,வினரின் கொண்டாட்டத்தால் காங்கிரசின் நிலை திண்டாட்டமாக உள்ளது.

கொள்கை வேறு, கூட்டணி வேறு
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‛உச்சநீதிமன்றம் பேரறிவாளன் உட்பட 7 பேரை குற்றவாளி எனக்கூறியது. ஆனால் அதே உச்சநீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரறிவாளன் விடுதலையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் எங்களுக்கும் மாறுபட்ட நிலைபாடு இருக்கலாம். எனவே கொள்கை வேறு, கூட்டணி வேறு' எனக் கூறினார்.