வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்ததால், 5 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. டில்லி எய்ம்ஸ் வரலாற்றில், குறைந்த வயதில் உறுப்புகள் தானம் செய்த பெருமை அந்த சிறுமிக்கு கிடைத்துள்ளது.
உ.பி., மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஹர்நாராயன் - பூனம் தேவியின் மகள் ரோலி(6.5). அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டதில், குண்டு சிறுமியின் தலையில் பாய்ந்தது. அதில், மூளையில் சேதம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், டாக்டர்கள் ஆலோசனைப்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ரோலி அனுமதிக்கப்பட்டார். அவரை, காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவு முயற்சி செய்தும், சிறுமி மூளைச்சாவு அடைந்தார். இதனை, பெற்றோரிடம் தெரிவித்த டாக்டர்கள், உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கி கூறினர். பெற்றோர்களும் ஒப்பு கொண்டதை தொடர்ந்து ரோலியின் கல்லீரல், சிறுநீரகம், இரு கருவிழிகள், இதய வாழ்வு ஆகியவை தானமாக அளிக்கப்பட்டன. இதன் மூலம் 5 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் 5 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த நிபுணர் தீபக் குப்தா கூறுகையில், உடல் உறுப்பு தானம் குறித்து அதிகம் தெரியாத நிலையில், உறுப்புகள் தானமாக அளித்ததற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எனக்கு தெரிந்தவரை, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிய வயது உறுப்பு நன்கொடையாளர் வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை. உயிர்களை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் கூறுகையில், உடல் உறுப்புகள் தானம் குறித்தும், எங்களது குழந்தை மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்பது குறித்து டாக்டர்கள் விளக்கினர். மற்றவர்களின் வாழ்க்கை மூலம் எங்களது மகளும் வாழ்வார் என்பதால், உறுப்பு தானம் வழங்கினோம். ரோலி எங்களை விட்டு சென்றாலும், மற்றவர்களின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE