புதுடில்லி: ஜிஎஸ்டி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கடல் சரக்குகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு: இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில உரிமைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சமமான உரிமை உள்ளது என தீர்ப்பு உள்ளது. பேரறிவாளன் விடுதலையையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இரு தீர்ப்புகளும் மாநில உரிமைகளை வலுப்படுத்தி உள்ளன.
மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதை தீர்ப்பு கூறியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு பரிசீலனைகளை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் அனுப்ப முடியும். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.