பள்ளிப்பட்டு : மூன்று சாலை சந்திப்பில் உள்ள சிறு பாலத்தின் தடுப்பு சுவர், தொடர்ந்து விபத்தில் சிதைந்து வருகிறது. இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டில் இருந்து, நகரி செல்லும் சாலையில், நெடியம் அருகே, வெங்கம்பேட்டை கூட்டு சாலையில், மூன்று சாலைகள் இணைகின்றன.இந்த முச்சந்தியில், சிறு பாலம் ஒன்று உள்ளது. இதற்காக, தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. வெங்கம்பேட்டை வழியாக, ஆந்திர மாநிலம், புத்துாருக்கு குறுக்கு வழி அமைந்துள்ளது.இதனால், ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக பள்ளிப்பட்டுக்கு வருகின்றன. குறிப்பாக, பள்ளிப்பட்டு அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் லாரிகள், இந்த வழியாக வருகின்றன.
முச்சந்தியில் வேகமாக வந்து திரும்பும் வாகனங்கள், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சிறு பாலத்தின் தடுப்பு சுவரில் மோதுகின்றன.இதனால், தடுப்பு சுவர் தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது. சமீபத்தில் கிழக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து, சீரமைக்கப்பட்டது.
தற்போது, மேற்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் விபத்தில் சிக்கி இடிந்து இருக்கிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE