திருத்தணி : ஏரி நீர்வரத்து கால்வாயில் ஏற்படுத்தப்பட்ட தடுப்பணை உடைந்ததால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்டது குடிகுண்டா கிராமம். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள், விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, பரவத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், நீர்வரத்து கால்வாய் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், குடிகுண்டா கிராமம் வழியாக செருக்கனுார் பெரிய ஏரிக்கு செல்கிறது.
இந்நிலையில், 2005 - 06ம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர்வரத்து கால்வாய் குறுக்கே, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 20 மீட்டர் நீளம், 0.80 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.இந்த தடுப்பணையில், தண்ணீர் தேங்கியதால், அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததுடன், 74 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், சமூக விரோதிகள் தடுப்பணையை சேதப்படுத்தினர். இதனால் நீர்வரத்து கால்வாயில் வரும் தண்ணீர் நிற்காமல் செல்கிறது.இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, குடிகுண்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது போதிய நிதியுதவி இல்லாததால் தடுப்பணையை சீரமைக்க முடியாது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE