ஊத்துக்கோட்டை : 'ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பி.டி.ஒ., சாந்தி வரவேற்றார்.கூட்டத்தில் நடந்த விவாதம்:குழந்தைவேலு - 19வது வார்டு - அ.தி.மு.க.,: ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள், திட்டங்கள் குறித்து கேட்க, கிராம ஊராட்சி பி.டி.ஓ., கூட்டம் நடக்கும் நாட்களில் விடுப்பு எடுக்கிறார். இதனால், திட்டங்கள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை.சாந்தி - பி.டி.ஓ.,: விடுப்பு குறித்து அவர் எனக்கு தகவல் தரவில்லை.
குழந்தைவேலு - 19வது வார்டு - அ.தி.மு.க.,: கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்.சாந்தி - பி.டி.ஓ.,: தீர்மானம் நிறைவேற்றினால், அதன் நகல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.திருமலை - 11வது வார்டு - காங்.,: வெங்கல் பகுதியில் குப்பை எடுப்பதில்லை. பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது
சாந்தி - பி.டி.ஓ.,: குப்பை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.லதா - 1வது வார்டு - அ.தி.மு.க.,: தாராட்சியில் வீடு கட்டும் பயனாளிகள் குறித்த தகவல் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. குப்பையை எடுப்பதில்லை. இலவச வீட்டு மனை யாருக்கு வழங்கப்படுகிறது என்ற தகவலும் இல்லை.ரமேஷ் - அ.தி.மு.க., - ஒன்றிய தலைவர்: குப்பை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் குறித்த தகவல் தெரிவிக்க வலியுறுத்தப்படும்.
சரவணன் - 18வது வார்டு - அ.தி.மு.க.,: தாமரைப்பாக்கம் அரசு பள்ளி பழுதடைந்து உள்ளது. கடந்த கூட்டத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?சாந்தி - பி.டி.ஓ.,: அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.மேலும், ௧.௫ கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.