வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வதோதரா-''உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது,'' என, பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
![]()
|
இங்கு, வதோதராவில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் சார்பில், இளைஞர் மாநாடு நடத்தப்பட்டது. இதை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:சமூக சேவை மற்றும் தேச கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த மாநாடு நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றால், இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், நாம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகளை வழங்கினோம். உலகம் இப்போது, பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு, நம் பாரம்பரிய முறைப்படி தீர்வுகளை கூறி வருகிறோம். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் யோகாவின் பாதையையும், ஆயுர்வேதத்தின் ஆற்றலையும் நாம் காட்டியுள்ளோம்.
மென்பொருளில் இருந்து விண்வெளி துறை வரை, புதிய வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நாடாக, நாம் வெளிப்பட்டு கொண்டிருக்கிறோம். அரசின் செயலாற்றும் முறை மாறியுள்ளது; சமூகத்தின் சிந்தனை மாறியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சாத்தியமில்லை என நினைக்கப்பட்ட இலக்குகளில், இன்று இந்தியா சிறப்புடன் பணியாற்றி வருவதை உலகம் உற்று நோக்கி வருகிறது.
![]()
|
புதிய இந்தியாவின் அடையாளங்களாக முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவை உள்ளன. அதேநேரத்தில் பழமையான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திர போராட்ட காலத்தில் நாம் பிறக்காததால், நாட்டுக்காக பணியாற்ற முடியவில்லை; உயிர் தியாகம் செய்ய முடியவில்லை என வருத்தப்பட வேண்டாம்.
ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் முக்கிய தேசப்பணி தான். சுற்றுச்சூழலை பாதுகாத்தல், துாய்மையை கடைப்பிடித்தல், பிளாஸ்டிக்கை தவிர்த்தல், 'டிஜிட்டல்' பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் ஆகியவையும் தேசத்துக்கு செய்யும் பெரிய தொண்டுகளாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE