தாம்பரம் : சிட்லபாக்கம் ஏரியில் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா பணிகளை, மீண்டும் துவக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது.
சென்னை புறநகரில், தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில், 100 ஏக்கரில், பெரிய ஏரி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பு போக, இந்த ஏரியின் பரப்பு, 50 ஏக்கராக சுருங்கி உள்ளது. ஏரியில், 2019 ஜூன் 22ல் பொது நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் இணைந்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து, 'சிட்லபாக்கம் ஏரி, 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்' என, அப்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த ஆட்சியில், 2020 பிப்ரவரியில் துவக்கப்பட்ட இப்பணிகள், கடந்த ஆண்டு தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்த பின், முற்றிலும் நிறுத்தப்பட்டன.இதைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று, சிட்லபாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள, தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு, சுற்றுச்சூழல் பூங்கா பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.