வானுார்,-விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில், சாலை அமைக்கும் திட்டம் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இதற்காக சில மரங்கள் வெட்டப்பட்டன.இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அது தொடர்பாக வெளியான தீர்ப்பில், 'மரங்களை வெட்டாமல், நீர் நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என, கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது' என, கூறப்பட்டது.
இதையடுத்து, ஆரோவில் அறக்கட்டளை மூலம், மரங்கள் இல்லாத பகுதியில் இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன.இந்த திட்டம் செயல்பட துவங்கிய நாளில் இருந்து, ஆரோவில் கமிட்டி, இரண்டு குழுக்களாக செயல்படுகிறது.நிர்வாக குழு தேர்தல் தொடர்பாக, இந்த இரண்டு நிர்வாக குழுக்களும், டவுன் ஹாலில் செயல்படுவதில் போட்டி நிலவியது. இது தொடர்பாக நேற்று முன்தினம், இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
அவர்களை ஆரோவில் போலீசார் சமரசம் செய்தனர்.தொடர்ந்து அறக்கட்டளை மூலம், டவுன் ஹாலுக்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நேற்று காலை 8:00 மணிக்கு, ஆரோவில் வாசிகள், 300க்கும் மேற்பட்டோர் டவுன் ஹாலை முற்றுகையிட்டனர்.