வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி-திருநெல்வேலியில் 4 பேர் பலியான கல் குவாரியின் உரிமையாளர் சொத்துகள் முடக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குவாரியில் சிக்கியுள்ள 6வது நபர் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான்குளத்தில் தமிழக காங். கட்சியின் துணைத்தலைவர் சேம்பர் செல்வராஜ் மகன் குமார் நடத்திவரும் வெங்கடேஸ்வரா கிரஷர் குவாரியில் மே 14 இரவு 11:30 மணிக்கு பாறைச் சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். மே 15 ல் மீட்புப்பணியில் முருகன் விஜயன் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர் மீட்பில் செல்வம் முருகன் செல்வகுமார் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன.நேற்று 5வது நாளாக மீட்பு பணி நடந்தது. சரிந்து விழுந்த பாறைக்குள் சிக்கியுள்ள 6 வது நபரான ராஜேந்திரன் உடலை தேடும் பணி நடந்தது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மீட்பு பணியின் போது கலெக்டர் விஷ்ணு எஸ்.பி. சரவணன் உடன் இருந்தனர்.
'சஸ்பெண்ட்'
கலெக்டர் கூறுகையில் ''ராஜேந்திரன் உடல் பாறைக்குள் இருப்பதால் வெடி வைத்து தகர்த்து பாறையை அப்புறப்படுத்தி விட்டு உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குவாரி குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாத கனிம வளத் துறை உதவி இயக்குனர் வினோத் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகி விட்ட குவாரி உரிமையாளர்கள் சேம்பர் செல்வராஜ் மகனை போலீசார் தேடி வருகின்றனர். கோடிக்கணக்கில் இருப்பு உள்ள அவர்களின் திருநெல்வேலி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.சி. 102 சட்டப்படி அவர்களது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அலுவலகங்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை சேகரித்து வருகிறோம்'' என்றார்.
கண்டுகொள்ளாத துறைகள்
தமிழகத்தில் குவாரி மற்றும் கிரஷர்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வாரம்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் துறையின் பட்டியலில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயர் இல்லை. தற்போதும் இறந்தவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்துறை அதிகாரிகள் அனைத்து குவாரிகளிலும் தொழிலாளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இறந்தவர்களில் யாருக்குமே தொழிலாளர் பிராவிடன்ட் பண்ட் இ.எஸ்.ஐ. போன்றவை பிடித்தம் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அதனை கண்டு கொள்ளவில்லை. விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் யாரும் இங்கு விசாரணைக்கு வரவில்லை.
குவாரிகள் மூடல்
இச்சம்பவத்திற்குப்பின் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் குவாரிகளில் விதிமீறல் தொடர்பாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலானவை செயல்படவில்லை.