வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-தமிழகத்தில் அடுத்த மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, தமிழக பா.ஜ., ஆதரவு அளித்துள்ளது.
தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருந்தது. தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் பலத்தை அறிய முடிவு செய்தார். அதற்காக, இந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அக்கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்து அதிக ஓட்டுகளை பெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 10ல் தேர்தல் நடக்கிறது. ஆறு எம்.பி.,க்களில் தி.மு.க.,க்கு நான்கும், அ.தி.மு.க.,வுக்கு இரண்டும் கிடைக்கும். தி.மு.க., மூன்று எம்.பி., பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில், ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்கிஉள்ளது.அ.தி.மு.க., தரப்பில், இரு எம்.பி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அதற்கு முன், பா.ஜ., ஆதரவை பெற முடிவு செய்தது. அதன்படி, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் நேற்று, சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு சென்றனர்.
அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். தனி அறையில், 15 நிமிடங்கள் பேசினார். இதையடுத்து, அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. அண்ணாமலை அளித்த பேட்டியில், ''தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வரும் ஆதரவு அளிப்பர்,'' என்றார்.வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், ''ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், பா.ஜ., ஆதரவை கேட்டு, கடிதம் அளித்துள்ளனர். அந்த கடிதத்தை அண்ணாமலையிடம் வழங்கி ஆதரவு கேட்டோம். அவர் ஏற்றுக் கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி,'' என்றார்.
பா.ம.க., ஆதரவு -
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய குழு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை அளித்து, ஆதரவு கேட்டனர். அ.தி.மு.க., கோரிக்கை குறித்து, பா.ம.க., மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
அதில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரிப்பது என, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த 2019 லோக்சபா தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க, பா.ம.க., முன்வந்துள்ளது. இது, இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் உறவு மலர வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE