வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: -கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதை அடுத்து, 12 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும் என்றும், அதன்பின் மேலும் இரண்டு நாட்களுக்கு கன மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1ல் துவங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு ஐந்து நாட்கள் முன்னதாக மே 27ல் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. எனவே, 'மழை குறையும் வரை ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். 'மலைப்பாங்கான பகுதிகளுக்கும், கடல் அலைகள் அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம்' என, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து, 'வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சமாளித்து, நிவாரண பணிகளை துரிதமாக செய்ய அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்' என, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுஉள்ளார்.