வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-''இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான்,'' என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு, இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில், சமீபத்தில் பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, வி.பி.என்., எனப்படும் 'விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்' தளங்கள், இணையதளங்களில் அத்துமீறல்கள் நடக்கும்போது, ஆறு மணி நேரத்துக் குள் தகவல் தெரி விக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கான தகவல்களை பாதுகாக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நாம் இணையதளத்தை பயன்படுத்தும்போது, நமக்கென, ஒரு 'ஐ.பி., அட்ரஸ்' எனப்படும் இணைய அடையாளம் உருவாக்கப்படும்.
இதன் வாயிலாக, எந்தக் கருவியில் இருந்து தகவல் தேடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.அதே நேரத்தில், வி.பி.என்., வாயிலாக பயன்படுத்தும்போது, நம்முடைய தகவல்கள் மறைக்கப்படும். இது தனிநபர் தகவல் பாதுகாப்பு என்று கூறப்படும் நிலையில், யார், எங்கிருந்து எந்த தகவல்களை தேடுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.இதையடுத்து, இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:இந்தியாவில் இணையத்தில் தகவல்களை சேமிக்காதவர்கள், உடனடியாக சேமிக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அமைப்புகள் கேட்கும் தகவல்களை உடனடியாக தர வேண்டும்.
இணைய விதிமீறல்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அது, இந்தியாவை விட்டு வெளியேறுவது தான். இணைய பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.