புதுடில்லி: பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது, 'ஐ - போன், ஆண்ட்ராய்டு' உள்ளிட்ட அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் எளிதாக ஊடுருவி, உளவு பார்க்கும் திறன் உடையது.
இந்நிலையில் நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு துறையினரும், இந்த பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்படுவதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
முறையான விதிமுறைகளை பின்பற்றி மற்ற நாடுகளைச் சேர்ந்த அரசுகள், விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருள் விற்கப்படுவதாகவும், தனியாருக்கு விற்பதில்லை என்றும் என்.எஸ்.ஓ., நிறுவனம் தெரிவித்தது.
'இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை' என மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அமைத்தது. இக்குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம் சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE