தனக்கு சொந்தமான குவாரிக்கு தடையாக இருந்த ஒன்றிய செயலரை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக, துாத்துக்குடி மாவட்ட தி.மு.க.,வில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க.,வை சேர்ந்த வைகுண்ட பாண்டியன் என்பவரும், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பேசிய போன் உரையாடல் பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. போன் உரையாடலின் போது, வைகுண்ட பாண்டியனை, அமைச்சர் மிரட்ட, பதிலுக்கு அமைச்சரை அவர் அசிங்க அசிங்கமாக திட்டிய பேச்சு பதிவாகி உள்ளது.
தற்போது, துாத்துக்குடி மாவட்ட போலீசார், வைகுண்ட பாண்டியன் மீது தொடர்ச்சியாக வழக்குகள் போட்டு, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து, வைகுண்ட பாண்டியன் வழக்கறிஞர் மலையேந்திரன் கூறியதாவது:
பத்மநாபமங்களத்தை சேர்ந்த வைகுண்ட பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளராக இருந்தார். அவரை, கருங்குளம் ஒன்றிய செயலராக்கினார் அமைச்சர். இருவருக்கும் இடையில் உறவு சீராக தான் சென்றது. பத்மநாபமங்களத்தில் அமைச்சருக்கு சொந்தமான கல் குவாரி இருந்தது. கிராம மக்கள் சேர்ந்து, அந்த குவாரியை இயக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக வைகுண்ட பாண்டியன் செயல்பட்டார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில், ஊரக ஊராட்சி தேர்தல் நடந்தது. பத்மநாபமங்களத்தில் ஊராட்சி மன்ற தலைவராக, வைகுண்ட பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது,
அமைச்சருக்கு பிரச்னையானது. அந்த ஊரில், அவரது குவாரியை சுமுகமாக இயக்க முடியவில்லை. இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வைகுண்ட பாண்டியனுக்கு போன் போட்டு மிரட்டினார். அமைச்சர் பேச்சு மிரட்டும் தொனியில் இருக்கவும்,
ஆவேசமாகி அமைச்சரை பாண்டியன் தாறுமாறாக திட்டினார். அமைச்சர் சொன்னபடியே, கயத்தாறை சேர்ந்த ஒருவரை வெட்ட வந்ததாக, போலி புகார் அடிப்படையில், வைகுண்ட பாண்டியனை கைது செய்து, பாளை சிறையில் அடைத்தனர். பின், அதை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்காக மாற்றி, ஏப்., 5ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆனால், கயத்தாறை சேர்ந்தவரோ, தான் அப்படியொரு புகார் தெரிவிக்கவே இல்லை; என, கோர்ட்டில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
இது குறித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:வைகுண்டபாண்டியனை கருங்குளம் ஒன்றிய தி.மு.க., செயலராக்கியதே நான் தான். காலில் விழுந்து கெஞ்சினான்; பதவியில் அமர்த்தினேன். ஆறுமுகநேரியில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு, 'பெட்டிஷன்' போட்டு, தொல்லை கொடுத்து வந்தார். எல்லாமே பணம் பறிப்பதற்காக நடந்தவை. அதைக் கேட்கத் தான் போனில் பேசினேன். அவர் ஆபாசமாக திட்டினார். மனிதர் தரம் அவ்வளவு தான் என, போனை வைத்து விட்டேன்.
இந்த விவகாரம் நடந்தது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன். தற்போது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதும், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பேசிய உரையாடல் பதிவை, புதிதாக பேசியது போல் வெளியே விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பொய் வழக்கு இல்லை!'
புகார் அடிப்படையில் தான், வைகுண்ட பாண்டியன் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. புகார் கொடுத்தவர் மறுத்தால், அதற்கு போலீஸ் என்ன செய்ய முடியும்?
புகார் கொடுத்தவரை வைகுண்ட பாண்டியன் தரப்பினர் மிரட்டி இருக்க கூடும். யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் போலீசுக்கு இல்லை. குண்டர் சட்டத்தை உடைத்து வெளியே வர வைகுண்ட பாண்டியன் தரப்பினர் முயற்சிக்கலாம் தவறில்லை. அதற்காக, போலீஸ் நடவடிக்கைக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது.
-- மாவட்ட போலீஸ் அதிகாரி, துாத்துக்குடி மாவட்டம்.- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE