மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நகருக்குள் மேலும் 3 பறக்கும் பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.

தற்போது நத்தம் ரோட்டில் 7 கி.மீ., தொலைவுக்கு பறக்கும்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநகராட்சியின் மேற்கு வாயில் பகுதியில் துவங்கும் மற்றொரு பாலம் கோரிப்பாளையம், ஏ.வி.பாலம் வழியாக வடக்குவெளிவீதி - கீழவெளிவீதி சந்திப்பு அண்ணாத்துரை சிலையில் முடிவடைகிறது.
ரூ.199.12 கோடி மதிப்பில் 3.01 கி.மீ., தொலைவுக்கு இப்பாலம் அமைய உள்ளது. இதில் செல்லுார் மற்றும் பீபிகுளத்திற்கு இருபிரிவுகள் அமையும். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணி பாக்கி உள்ளது.
இதேபோல சிம்மக்கல்லில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை 2 கி.மீ., தொலைவுக்கு மற்றொரு பாலம் அமைய உள்ளது. இதில் வக்கீல் புதுத்தெருவில் ஒரு பிரிவு இறங்கும் வகையில் பாலம் அமைகிறது. மற்றொரு பாலம் நெல்பேட்டையில் துவங்கி கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி வழியாக அவனியாபுரம் வரை 4.800 கி.மீ., தொலைவுக்கு அமைகிறது.
இந்த 2 பாலங்கள் குறித்த கருத்து கேட்பு, சர்வே பணிகள் முடிந்துள்ளன. கட்டுமான பணிகள், திட்டமதிப்பீடு போன்றவை குறித்து பொறியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இப் பாலங்களின் கட்டுமான பணி 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

இதுதொடர்பாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ''கோரிப்பாளையம் பால பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. விரைவில் ஒப்பந்தப்பணி துவங்க உள்ளது'' என்றார்.நகரில் எத்தனை பாலங்கள், ரோடு வசதிகள் அமைத்தாலும் ஆக்கிரமிப்புகள் குறையாதவரை நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்பதே உண்மை. அதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE