இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
இந்தியாவில் அத்தியாவசிய பண்டங்கள், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்து உள்ளது. இதை கண்டித்து, இ.கம்யூ., - மா.கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இணைந்து, வரும், 26, 27ல் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளன.
ஏன், நீங்க தனியா போராட்டம் நடத்த வேண்டியது தானே... உங்க கட்சியின் பலம் அம்பலமாகிடும்னு, மற்ற கட்சிகளை கூட்டு சேர்க்குறீங்களோ?
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
ஆசிரியர்கள், தங்களது சொந்த மாவட்டத்தில், வீட்டுக்கு அருகில் உள்ள விடைத்தாள் மதிப்பீடு மையத்துக்கு சென்று விடைத்தாள் மதிப்பீடு செய்யலாம் என்ற அனுமதியை, நடப்பாண்டில் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
விட்டால், 'விடைத்தாள்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுங்கள்... திருத்தி தருகிறோம்' என கேட்பீர்கள் போலிருக்கிறதே!

தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேட்டி:
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ரோம் நகரில் ஒலிக்கச் செய்தது, சாதாரணமான விஷயம் அல்ல. அது, தமிழக முதல்வருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றுவதற்கான முயற்சியை, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் மொழியின் சிறப்பை பற்றி எல்லாருக்கும் நன்கு தெரியும். அதற்கு நீங்கள், 'பேடன்ட்' வாங்க வேண்டாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் தங்கவேலு அறிக்கை:
நுால் விலை உயர்வால், கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ள பின்னலாடை மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் இன்னலை சந்திக்கின்றன. இம்மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஒரே நாளில், 300 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இங்கெல்லாம் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால், இந்த விவகாரத்தை கண்டுக்காமல் இருக்கின்றனரோ?
கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேட்டி:
பருத்தி மற்றும் நுால் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. பருத்தி மற்றும் நுால் விலையை குறைக்க, மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவால நடந்த பேரறிவாளன் விடுதலைக்கு சொந்தம் கொண்டாடுற நீங்க, பருத்தி, நுால் விலை உயர்வுக்கு கைவிரிப்பது என்ன அரசியல்?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE