மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்த கமுதி அருகே உள்ள பாப்பனம் ஊராட்சித் தலைவி அமுதாவிற்கு தனி நீதிபதி விதித்த ரூ.25 ஆயிரம் அபராதத்தை நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டது. ஊராட்சித் தலைவி அமுதா தாக்கல் செய்த மனு: மாசி திருவிழாவிற்காக குடும்பத்தினருடன் குல தெய்வம் கோயிலுக்குச் சென்றோம். தேர்தல் தகராறு காரணமாக என் கணவரை ஒருவர் தாக்கினார். கணவர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் மீது அபிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப் பதிந்து காவலில் எடுத்து விசாரித்தார். அபிராமம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். தவறான வார்த்தைகளால் என்னை திட்டிய இன்ஸ்பெக்டர் மோசமாக நடத்தினார். இன்ஸ்பெக்டருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அமுதா குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்: இரு தரப்பை சேர்ந்த சிலரிடம் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். 13 நாட்களுக்குப் பின் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மனுதாரர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளார். இதில் தாமதமானது சந்தேகத்தை எழுப்புகிறது.
போலீசாரின் மன உறுதியைக் குலைக்க அல்லது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ரிட் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். போலீசார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்த ஆதாரம் இல்லாத பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை அபிராமம் இன்ஸ்பெக்டரிடம் வழங்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அத்தொகையை இன்ஸ்பெக்டர் பயன்படுத்த வேண்டும் என்றார். இதை எதிர்த்து அமுதா மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அப்துல் குத்துாஸ், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு: 13 நாட்கள் தாமதமாக புகார் செய்தது ஏற்புடையதே. மனுதாரர் போலீஸ் ஸ்டேஷனில் தகராறில் ஈடுபடவில்லை என தெரிவித்தது.நீதிபதிகள்: தனி நீதிபதியின் உத்தரவில் மனுதாரருக்கு எதிராக அபராதம் விதித்த பகுதியை மட்டும் நீக்கம் செய்கிறோம். தனி நீதிபதியின் உத்தரவிலுள்ள இதர கருத்துக்களில் தலையிட விரும்பவில்லை. மனுவை பைசல் செய்கிறோம் என்றனர்.