வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை, வாரணாசி மாவட்ட மூத்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை, மாநில நீதித்துறையில் அனுபவம் பெற்ற மற்றும் மூத்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, 'வீடியோ'வாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்துப் பெண்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சில காரணங்களால் ஆஜராக இயலாதது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியது. அதுவரை இது தொடர்பான வழக்கில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என, வாரணாசி நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. இதனை, நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். மசூதியில் உள்ள சிவலிங்கம் உள்ளதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் தொழுகை நடத்த சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கிறது. ஆய்வு தொடர்பாக தகவல்கள் கசிவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE