சென்னை : 'தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை, முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிக்கப்படும் பெண்களுடன் இணைந்து போராடுவோம்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த ஓராண்டில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் துணையோடு நடக்கிறது.
ஜெயலலிதா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம், இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது.போலி மதுபானங்கள், கடத்தல் மதுபானங்கள், 'சந்துக் கடைகள்' என்ற பெயரில், மாநிலம் முழுதும் தாராளமாக விற்கப்படுவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
மரணம்
அ.தி.மு.க., அரசில் சுதந்திரமாக செயல்பட்ட, தமிழக காவல் துறையின் கைகள், ஆளும் தி.மு.க.,வினரால் கட்டப்பட்டு உள்ளதால், இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சுற்றுலாப் பயணியர், பொதுமக்கள் அதிகம் செல்லக் கூடிய, மெரினா கடற்கரை மணலில், கள்ளச்சாராய ஊறல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது.
காவல் துறைக்கு தெரியாமல், இவ்வளவையும் புதைத்து வைக்க முடியாது. சென்னை முதல் குமரி வரை, கள்ளச்சாராய விற்பனை, ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கன ஜோராக நடக்கிறது.இந்நிலை இப்படியே தொடர்ந்தால், தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் என, மகன், மகள் வைத்திருக்கும் பெண்கள் அஞ்சுகின்றனர்.
தியாகம்
கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தாமதம் ஏற்பட்டால், பெண்களுடன் இணைந்து, வீதியில் இறங்கி போராடுவோம். மக்களின் உயிரையும், உடைமையையும் காக்க, அ.தி.மு.க., எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE