ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட போலீசார், அதிகாரிகள் மீதான குற்றங்கள் குறித்து பல உண்மைகளை டி.ஜி.பி.,யிடம் தெரிவிக்க விரும்புவதாக மதுரை பட்டாலியன் போலீஸ்காரர் கனகராஜ் வெளியிட்ட வீடியோ குறித்து டி.ஜி.பி., அலுவலகம் விசாரிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கோடாரியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இடமாற்றத்தில் மதுரை பட்டாலியன் போலீசாக பணியில் சேர உள்ள இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் குறித்து பல உண்மைகளை டி.ஜி.பி., சைலேந்திர பாபுவிடம் கூற விரும்புவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், டி.ஜி.பி.,யை சந்திக்க பலமுறை சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்குள்ளவர்கள் அவரை சந்திக்க விடாததால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதனால் இந்த வீடியோவை கடைசி ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், போலீஸ் துறை ஒரு குடும்பம் போன்றது. எனது குடும்பத்தில் உள்ள பிரச்னையை போலீஸ் துறையின் தந்தையாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே தங்களை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும், என்றும் கூறியுள்ளார்.கனகராஜ் மனைவி முருகவள்ளி ராமநாதபுரத்தில் போலீசாக பணியாற்றுகிறார். குடும்ப பிரச்னையில் பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கடந்த பிப்ரவரியில் கனகராஜ் ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியானது.கனகராஜ் வீடியோ குறித்து எஸ்.பி., கார்த்திக்கிடம் கேட்ட போது, '' அவர் மதுரை பட்டாலியனில் இருப்பதால் அப்பிரிவு போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் அவர் மீதுள்ள புகார்கள், நடவடிக்கைகள் குறித்து கேட்டால் அவற்றை வழங்குவோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE