''ரயில்வே திட்டப் பணிகளில், தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. தற்போது கூட, தமிழகத்தில், 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை வந்திருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
'மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை' என, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறுகின்றனரே?
அது உண்மை அல்ல. தமிழகத்தில், 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள், தற்போது நடந்து வருகின்றன. மத்திய அரசு, யாரையும் புறக்கணிக்காமல் நியாயமாக செயல்படுகிறது என்பதை, இது காட்டுகிறது. இந்த திட்டங்களுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதன் வாயிலாக, ரயில்வே துறையின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே தமிழகத்தில் புதிய திட்டங்கள் அறிமுகமாகவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?
பல ஆண்டுகளாக ஏராளமான திட்டங்கள் நிலுவையில் உள்ளன. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், பல திட்டங்கள் கிடப்பில் இருந்தன. அதனால், முடிவு பெறாத திட்டங்களை, முதலில் விரைந்து முடிக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டார். அந்த அடிப்படையில், ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
தமிழக அரசிடம் இருந்து எந்தவிதமான உதவிகள் தேவை?
தேவையான உதவிகள் கிடைக்கின்றனவா?ரயில்வே திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர, மாநில அரசின் முழு ஒத்துழைப்பு இருந்தாக வேண்டும். தேவையான நிலத்தை ஒதுக்கி, அதை கையகப்படுத்துவதில், மாநில அரசின் முழு ஒத்துழைப்பு தேவை. அதை தர வேண்டும் என்பதே, மாநில அரசிடமும், நாங்கள் வைக்கும் பிரதான கோரிக்கை. திட்டங்கள் எவ்வளவு விரைவாக நிறைவு பெறுகிறதோ, அவ்வளவு வேகமாக நாங்கள் தொடர்ந்து மாநில அரசுக்கும், மக்களுக்கும் உதவிகள் செய்வோம். மாநில அரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது. ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் பொருட்டு, ரயில்வே அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசுகின்றனர். தலைமைச் செயலர் உள்ளிட்ட பல அதிகாரிகளும், திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல்படுகின்றனர்.
தமிழகத்துக்கு என்னென்ன புதிய ரயில்வே திட்டங்கள் கொண்டு வரப் போகிறீர்கள்?
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து ரயில் நிலையங்களை, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், முழுமையாக மறுகட்டமைப்பு செய்ய போகிறோம். உலக தரத்திற்கு இணையாக, அந்த ரயில் நிலையங்களை உயர்த்த போகிறோம். சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்கள் முதற்கட்டமாக, தரம் உயர்த்தப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு மட்டும், 760 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இத்திட்டத்தை விரைவில் பிரதமர் துவக்கி வைப்பார். ஐந்து ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுவது, தமிழகத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்துக்கான சான்று. ஒவ்வொரு ரயில் நிலையமும், அந்த ஊரின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் மறுகட்டமைப்பு செய்யப்படும். அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.
'வந்தே பாரத்' ரயில்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றனவா?
வரும் 2023 ஆக., 15க்குள், 'வந்தே பாரத்' ரயில்கள், 75 எண்ணிக்கையில், சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படும். அதன்பின், மேலும் 400 ரயில்கள், இங்கே தயாரிக்கப்படும்.
யானைகள் வழித்தடத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்படுவதால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறதே?
இது நீண்ட கால பிரச்னை. ஒரு தீர்வை கண்டுபிடித்து விட்டோம். இதற்காக, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள வனவிலங்கு ஆய்வு மையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றினோம். எங்கு யானை வழித்தடங்கள் உள்ளனவோ, அங்கு ரயில் தண்டவாளங்கள் உயர்த்தி கட்டப்படும். அதன் கீழே யானைகள் செல்லும் அளவுக்கு சுரங்க பாதைகள் இருக்கும். நல்ல அகலத்துடன், 4.5 மீட்டர் உயரத்துக்கு, இந்த சுரங்க பாதைகள் இருக்கும். பொதுவாக யானைகள் 3 மீட்டர் உயரம் தான் இருக்கும். 4.5 மீட்டர் உயரத்துக்கு சுரங்க பாதைகள் இருப்பதால், யானைகள் சிரமமின்றி செல்லும். இதற்கான கட்டுமானங்களை துவக்கி விட்டோம்.
ரயில்வே வேலை வாய்ப்புகளில், தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; வட மாநிலத்தவர்களே அதிக அளவில் பணி அமர்த்தப்படுகின்றனர் என சொல்லப்படுகிறதே?
ரயில்வே தேர்வு நடைமுறைகள் நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் உள்ளன. ஏராளமான திறமை வாய்ந்த தமிழ் சொந்தங்கள், ரயில்வே துறையில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பொறியியல் துறையில், தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகம் எப்போதுமே, திறமையாளர்கள் நிறைந்த மாநிலம்.அப்படியென்றால், வேலை வாய்ப்பு அளிப்பதில் பாகுபாடு இல்லை என்று சொல்கிறீர்களா?
சட்டப்படி, நெறிமுறைகள்படி, வெளிப்படையாக அனைத்து ஆளெடுப்பு பணிகளும் நடக்கின்றன. தற்போது கூட, 1.40 லட்சம் இடங்களுக்கான ஆளெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை, ஆளெடுப்பு தேர்வுகளின் தரம் பற்றியோ, அதன் வெளிப்படைத் தன்மை பற்றியோ, ஒரு புகார் கூட எழவில்லை.
ஆனால், வெகு தொலைவில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதே?
அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. கடந்த காலத்தில் சில பிரச்னைகள் இருந்தன. சமீபத்தில் நிறைவடைந்த, 'லெவல் 6' மற்றும் 'லெவல் 4' தேர்வுகளில், ஒரு சில தேர்வு மையங்களில் குளறுபடி நடந்து இருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்தன. அதனால், இனிமேல் தேர்வர்களின் ஊர்களில் இருந்து, 500 கி.மீ., தொலைவுக்குள் தேர்வு மையங்களே ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த முடிவை, தேசிய அளவில் எடுத்தோம். தேர்வர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்தோம். இலவச ரயில் பயண வசதி செய்து கொடுத்தோம். அடுத்த கட்ட தேர்வுகளான, 'லெவல் 3' மற்றும் 'லெவல் -2'வில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவைப்படவில்லை. அதனால், இந்த தேர்வுகளுக்கு மையங்கள் அருகிலேயே இருக்கும்.
உங்கள் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, ரயில்வே துறை தனியார்மயப்படுத்தப்படும் என்பது தான். அது சரியான விமர்சனமா?
நிச்சயம் இல்லை. ரயில்வே பணிகள், தனியார்மயமாக்கப்படாது என்பது, மத்திய அரசின் கொள்கை. இதை, மிகத் தெளிவாக பார்லிமென்டிலும், வெளியேயும் கூறி வருகிறோம். ரயில்வே துறை என்பது, நாட்டுக்கு முக்கியமான துறை. அது ஏழைகளுக்கு சேவை செய்வதற்கு என்றே உள்ள துறை. அதை ஒருபோதும் தனியார் மயமாக்க மாட்டோம்.
ஆனால், தனியார் -- அரசு கூட்டு பங்களிப்பு என்ற பெயரில், தனியார் துறைக்கு அனுமதி அளிப்பதாக கூறப்படுகிறதே?
அந்த தகவலில் உண்மை இல்லை. உதாரணமாக, தமிழகத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள ஐந்து ரயில்வே நிலைய பணிகளை செய்ய போவது, ரயில்வே துறை தான். இந்த பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொள்ளும். சென்னை ஐ.சி.எப்., ஆலையை தனியார்மயமாக்க போகிறீர்களா?அந்த சிந்தனையே எங்களுக்கு இல்லை. ஆனால், இங்கு ஒரு விஷயத்தை கூறியாக வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றாக வேண்டும். 1950களில் இருந்த தொழில்நுட்பத்தை வைத்து, 2022ல் ரயில்வே துறையை நடத்த முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்கவில்லை என்றால், பயணியருக்கு மேம்பட்ட சேவையை அளிக்க முடியாது. அவர்களுக்கு நவீனமான ரயில்கள், தரமான ரயில் நிலையங்கள், பாதுகாப்பான பயணம் தேவை. இவற்றை வழங்க வேண்டும் என்றால், நாம் நவீன தொழில்நுட்பங்களை ஏற்க தான் வேண்டும்.
பல்வேறு காரணிகளால் ரயில் கட்டணம் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறதே?
தற்போது எந்த எண்ணமும் இல்லை. கட்டண உயர்வை பற்றி யோசிக்கக் கூட இல்லை. அதனால், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE