தேனி : தேனியில் அமைச்சர்கள் ஆய்வு செய்தி வெளியிடுவதற்காக வழங்கிய பணத்தை பி.ஆர்.ஓ., அறையில் பங்கிடுவதில் நிருபர்களுக்கு இடையே ஏற்பட்ட அடிதடி தகராறு தொடர்பாக கலெக்டர் முரளீதரன் உத்தரவில் பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். சம்பவம் குறித்து டி.எஸ்.பி., முத்துக்குமார் நிருபர்களிடம் விசாரணை நடத்தினார்.
தேனியில் மே 18 ல் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு கலந்தாய்வுக் கூட்டம் செய்தியை சில பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக இரவில் பி.ஆர்.ஓ., அறையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ராமமூர்த்தி, பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் முன்னிலையில் சில நிருபர்களுக்கு ரூ.500 வீதம் வழங்கினர். இதனை பெற 'வாட்ஸ் ஆப்'களில் பத்திரிகை நடத்துவோர், போலி பத்திரிகையாளர்கள் கூடினர். அங்கு நிழல் பி.ஆர்.ஓ.,வாக செயல்படும், பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் ராஜேந்திரபிரசாத்திற்கும், நிருபர் சின்னதம்பிக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. நாற்காலிவீசி தாக்கிக் கொண்டனர். பி.ஆர்.ஓ., தப்பி ஓடினார்.
கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்க்ரேவிடம் தேனி பிரஸ் யூனியன் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து பி.ஆர்.ஓ., வை 10 நாட்கள் கட்டாய விடுப்பில் செல்ல கலெக்டர் அறிவுறுத்தினார்.எஸ்.பி.,யிடம் வழங்கிய புகாரை தொடர்ந்து பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார், நேற்று தேனி பிரஸ் யூனியன் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட நிருபர் சின்னதம்பி, தாக்குதலில் ஈடுபட்ட ராஜேந்திரபிரசாத் உட்பட 25 பேரிடம் விசாரணை நடத்தினார். சின்னதம்பி ஒருபவுன் செயினை பறித்ததாகவும் ராஜேந்திரபிரசாத் எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.