சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ., மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நேற்று 3வது நாளாக ஆய்வு செய்தனர். தொடர் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் பெரும்பான்மை பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.சிவகாசியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு விதித்துள்ளது.
டில்லியிலிருந்து சிவகாசி வந்த சி.பி.ஐ., அதிகாரி அஜின் ராஜ் தலைமையிலான 7 பேர், கடந்த இரு நாட்களாக இப்பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்தனர்.சிவகாசி சல்வார்பட்டி, பெத்தலுபட்டி, வி.சொக்கலிங்கபுரம் பட்டாசு ஆலைகளில் நேற்றும் 3வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு அறைக்கும் சென்று பட்டாசு தயாரிக்கப்படுவதை குறிப்பு எடுத்தனர். மாதிரிக்கு முழுமையாக தயாரித்த பட்டாசுகள், மூலப்பொருட்களை எடுத்து சென்றனர்.