வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருத்தணி: திருத்தணி கல்வி மாவட்டத்தில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு, 38.92 கோடி ரூபாய் தேவை என பொதுப்பணித் துறையினர் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பியுள்ளனர். நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், 54 பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருத்தணி கல்வி மாவட்டத்தில் திருத்தணி,ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில் 22 உயர்நிலை, 35 மேல்நிலை என மொத்தம் 57 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கற்பதில் சிரமம்
இப்பள்ளிகளில், 11 ஆயிரத்து 621 மாணவர்கள்; 11 ஆயிரத்து 947 மாணவியர் என, மொத்தம் 23 ஆயிரத்து 568 மாணவர்கள் பயில்கின்றனர்.பெரும்பாலான அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், ஆய்வகம் மற்றும் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் உள்ளது.குறிப்பாக, பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாமல், மாணவ - மாணவியர் தவிக்கின்றனர்.
தவிர, வகுப்பறையில் தரைத்தளம் சேதம், கதவு, ஜன்னல் உடைப்பு மற்றும் மின் விசிறிகள், மின் விளக்குகள் போன்றவை இல்லாததாலும் மிகவும் சிரமப்படுகின்றனர்.சில பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் இல்லாததாலும், கழிப்பறைகள் சுத்தம் செய்ய தேவையான உபகரணங்கள் இல்லாததாலும், கழிப்பறைகளில் கடும் துர்நாற்றம் வீசுவதால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், தங்கள் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டட வசதிகள் குறித்த பட்டியலை கல்வித்துறை கேட்டிருந்தது.
பரிந்துரை கடிதம்
அதன்படி பட்டியல் தயாரித்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுடன், மொத்தம் 54 அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி, பொதுப்பணித் துறையினருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் ஆய்வு செய்து, சேதம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுத்தனர்.தற்போது, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கும், சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதிக்காக பொதுப்பணித் துறையினர் காத்திருக்கின்றனர்.

திருத்தணி கல்வி மாவட்டம், 2018 ஜூன் 1ம் தேதி புதிதாக ஏற்படுத்தப்பட்டது. அப்போது திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆய்வக கட்டடத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சொந்தமாக கட்டடம் இல்லாததால், மாவட்ட கல்வி அலுவலக ஆய்வக கட்டடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகம் இல்லாததால், அறிவியல் பாடம் தொடர்பான செய்முறை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். கடந்த மாதம் நடந்த அரசு செய்முறை தேர்விலும், கடும் சிரமத்துடன் செய்முறை தேர்வு எழுதினர்.
பள்ளி சீரமைப்பு குறித்து, பெயர் வெளியிடாத திருத்தணி பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள 57 பள்ளிகளில், 54 பள்ளிகளில் பராமரிப்பு, குடிநீர், கைகள் கழுவதற்கு குழாய்கள், மாணவ - மாணவியருக்கு தனித்தனி கழிப்பறை மற்றும் அதற்கான உபகரணங்கள் தேவைப்படுகின்றன.தவிர வகுப்பறை, ஆய்வகம், சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் போன்றவை ஏற்படுத்துவதற்கு, மொத்தம் 38.92 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயார் செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.மேலும் சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்கும், நிதி ஒதுக்கீடு கோரி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். 54 பள்ளிகளில் ஏற்படுத்தப்பட உள்ள உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்.நிதி ஒதுக்கீடு மற்றும் அரசு நிர்வாக அனுமதி கொடுத்தவுடன் பணிகளுக்கு 'டெண்டர்' விட்டு, மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE