சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
முதல்வரின் கனவுத் திட்டமான 'சிங்கார சென்னை 2.0' திட்டம் அமல்படுத்தப்பட்டும், சாலைகள் மோசமாக உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், அந்தாண்டு இறுதியில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. இதில் சேதமடைந்த சாலைகளின் ஒட்டுபோடும் பணிக்கு, பல கோடி ரூபாயை மாநகராட்சி செலவழித்தது.
தொடர்ந்து, சாலைகளை கணக்கெடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரை, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுபாக நடந்தன. 30 சதவீத சாலைகள் அமைக்கப்பட்ட பின், பிப்ரவரியில் தேர்தலால் இப்பணிகள் தடைபட்டன.தேர்தலுக்குப் பின் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை சார்பாக அமைக்கப்படும் சாலை பணிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், மாவட்ட, வட்ட செயலர்கள் உள்ளிட்டோர், ஒப்பந்ததாரர்களிடம் 'கமிஷன்' கேட்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வழங்காத ஒப்பந்ததாரர்கள், பல்வேறு வகையில் இடையூறுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அத்துடன், மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியங்களால் தோண்டப்படும் பள்ளங்களால், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன.இதில், திருவொற்றியூர் மண்டலத்தில் எண்ணுார், உலகநாதபுரம் பிரதான சாலை, கத்திவாக்கம் மேம்பாலம் கீழுள்ள சாலை, எர்ணாவூரின் பல சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
![]()
|
திருவொற்றியூர் மேற்கில் அம்பேத்கர் நகர் பிரதான சாலை, சரஸ்வதி நகர் இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகளும் சேதமடைந்துள்ளன. மணலி மண்டலத்திலும், பல சாலைகள் தோண்டப்பட்டு, மறுசீரமைக்கப்படாமல் உள்ளன.அம்பத்துார் மண்டலத்தில் கள்ளிக்குப்பம், ஓம் சக்தி நகர், தென்றல் நகர், முத்தமிழ் நகர், அம்பத்துார் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், பெரும்பாலான சாலைகள், போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.
மாதவரம் மண்டலத்தில், புழல் அடுத்த வினாயகபுரம்- - சூரப்பட்டு பிரதான சாலை, செம்பியம் - -புழல் கதிர்வேடு இணைப்பு சாலை மற்றும் பல முக்கிய சாலைகள் அனைத்தும், கடுமையாக சேதமடைந்து உள்ளன.தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலை, விவேகானந்தர் இல்லம் பேருந்து நிறுத்தம் பகுதி சாலை உள்ளிட்ட சில சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளன.
அண்ணா நகர் மண்டலத்தில் 5 மற்றும் 7வது அவென்யூ, நடுவாங்கரை மூவேந்தர் சாலை, திருமங்கலம் 100 அடி சாலை உள்ளிட்டவை மோசமான நிலையில் உள்ளன.வில்லிவாக்கம் மற்றும் ஐ.சி.எப்., பகுதியிலுள்ள எம்.டி.எச்., சாலை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெஞ்சாலை, சிட்கோ தொழிற்பேட்டை மூன்றாவது சாலை, அரும்பாக்கம் 100 அடி சாலை உள்ளிட்ட பல சாலைகள், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
வளசரவாக்கம் மண்டலத்தில் நெற்குன்றம் 145வது வார்டில், 224 சாலைகள் உள்ளன. அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன.இதேபோல், 148வது வார்டில், 200 சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன. 154 மற்றும் 155வது வார்டிலும், பெரும்பாலான சாலைகள் மண் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.கோடம்பாக்கம் மண்டலத்தில், வடபழநி ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.மேற்கு மாம்பலம் வீராசாமி தெருவில் விழுந்த பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் முடியாததால், அச்சாலை மூடப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் ரயில்வே பாடர் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது.ஆலந்துார் மண்டலத்தில், 2,200க்கும் மேற்பட்ட தெரு சாலைகள் உள்ளன. இந்த மண்டலத்தை பொறுத்தவரை, 90 சதவீத சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷன் சாலை சீரமைக்கப்படவில்லை. அதேபோல ஆதம்பாக்கம், கூட்டுறவு நகர் பிரதான சாலை, இதுவரை சீரமைக்கப்படவில்லை.மணப்பாக்கம் பகுதியில் மேட்டுக்காலனி, சி.ஆர்.ஆர்.,புரம், ஆறுமுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்தாலும், சாலைகள் அமைக்கப்படவில்லை. முகலிவாக்கத்தில் ஏ.ஜி.எஸ்., காலனியில், ஆங்காங்கே சாலைகள் மோசமாக உள்ளன.அடையாறு மண்டலத்தில், திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி பகுதியில் சில சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன.சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 20க்கும் மேற்பட்ட சாலைகள், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் 15க்கும் மேற்பட்ட சாலைகள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில், தாம்பரம் -- முடிச்சூர் சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலையில் கேம்ப் சாலை சந்திப்பு, காந்தி, கக்கன், ராஜாஜி, தர்காஸ் சாலை சந்திப்பு ஆகியவை, போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகின்றன.அதேபோல் பீர்க்கன்காரணை, அப்துல் கலாம் பூங்கா சாலை, விவேகானந்தர் சாலை, வ.உ.சிதம்பரனார் சாலை, பெருங்களத்துார் பகுதியில் குண்டுமேடு சாலை மற்றும் பழைய பெருங்களத்துார் பகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன.தமிழக முதல்வர் ஸ்டாலின், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தில் சாலைகள் அமைத்தல், சுகாதாரம், மாநகரை அழகுபடுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.ஆனால், பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், இதுதான் சிங்கார சென்னை 2.0 திட்டமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், மின்சார வாரியம், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த பின், சாலைகள் அமைக்கப்படும். பணிகள் நடைபெறாத சாலைகள் சேதமடைந்திருந்தால், மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரிப்பன் மாளிகையிலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில், திருவேற்காடு 3வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் பிரதான சாலை, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம், 17வது வார்டுக்கு உட்பட்ட பி.ஓ.டி., சாலையும், கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல பட்டாபிராம், 15வது வார்டுக்கு உட்பட்ட ஐ.ஏ.எப்., சாலை உள்ளிட்ட பல சாலைகள், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், மோசமான நிலையிலுள்ளன
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE