பொள்ளாச்சி: தேங்காய் கொள்முதல் விலை கடுமையாக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்தாலும், கொப்பரையாக மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 1.5 லட்சம் ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மற்ற பயிர் சாகுபடியை கை விட்டு, தென்னை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
விலைச்சரிவு
இந்நிலையில், தேங்காய் விலைசரிவால், விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நடப்பாண்டில் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தள்ள நிலையில், தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
தோட்டத்தில் தேங்காய் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில், கொப்பரை சந்தை விலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கொப்பரை விலை வெளி மார்க்கெட்டில், கிலோ, 81 - 83 ரூபாயாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே பருவத்தில், தோப்பில் ஒரு தேங்காய், 16 - 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவால், ஒரு தேங்காய், 8 - 10 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை, விவசாய பணியாளர்களின் கூலி, மளிகைப் பொருட்கள் விலை குறைந்தது, 25 சதவீதம் அதிகரித்துள்ளதால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
முழு பலன் இல்லை
பிரச்னையின் தீவிரத்தை, பல்வேறு அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றதன் விளைவாக, தேங்காய் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 105.90 ரூபாய் நிர்ணயித்து, அரசு கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை பகுதிகளில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இது, தேங்காய் விலை வீழ்ச்சியை சரி செய்ய எடுக்கப்பட்ட நல்ல முயற்சி என்றாலும், நடைமுறை சிக்கல்களால் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

தேங்காயை தோண்டி எடுத்து, உலர வைத்து கொப்பரையாக்கி, விற்பனை செய்ய வேண்டும். அதற்கு, ஆட்கள், உலர்களம் வசதிகள் அனைத்து விவசாயிகளிடமும் இல்லை. சிறு, குறு விவசாயிகளால் இந்த மதிப்புக்கூட்டு நடவடிக்கையை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லை. இதனால், பெரிய விவசாயிகளும், விவசாயிகள் என்ற அடையாளத்தில் உள்ள வியாபாரிகளும் மட்டுமே பயனடைகின்றனர்.
மாற்றம் தேவை
இதற்கு தீர்வாக, கொப்பரைக்கு பதிலாக, நேரடியாக தேங்காயை அரசு கொள்முதல் செய்து, நிறுனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கொப்பரையாக மாற்றி இருப்பு வைத்து விற்கலாம் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இத்திட்டத்தில், ஒரு டன் உரித்த தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, 30 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்க வேண்டும் என்கின்றனர். நடைமுறையில் மிகவும் பலனளிக்கும் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தும் போது, விவசாயிகள் பலனடைவது மட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் கலப்படம், தேங்காய் மற்றும் கொப்பரை சந்தையில் 'சிண்டிகேட்' ஆதிக்கம் ஒழிக்கப்படும்.
ஆண்டு முழுக்க விவசாயிகளுக்கு சீரான விலை கிடைக்கும். மேலும், கொப்பரை, எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் சக்தி, ஒரு சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அரசிடம் சென்று விடும்.இந்த கோரிக்கையை, பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, கோவை, திருப்பூர் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல்வருக்கு கடிதம்!
தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக சத்துகள் நிரம்பிய தேங்காய் எண்ணெயை வினியோகிக்க வேண்டும். பாமாயிலுக்கு வழங்கும் மானியத்தை தேங்காய் எண்ணெய்க்கு வழங்க வேண்டும்.
மேலும், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் நிலையில், அவற்றுள் சமையல் எண்ணெயாக தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து, கொப்பரைக்கு பதிலாக, நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்யும் திட்டத்தை அரசு பரிசீலித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளார்
தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக சத்துகள் நிரம்பிய தேங்காய் எண்ணெயை வினியோகிக்க வேண்டும். பாமாயிலுக்கு வழங்கும் மானியத்தை தேங்காய் எண்ணெய்க்கு வழங்க வேண்டும்.
மேலும், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் நிலையில், அவற்றுள் சமையல் எண்ணெயாக தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து, கொப்பரைக்கு பதிலாக, நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்யும் திட்டத்தை அரசு பரிசீலித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளார்.