பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், விதிமுறை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல், நகராட்சி வேடிக்கை பார்க்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிளக்ஸ் கலாசாரத்தால் வீண் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி நகரில் பிளக்ஸ் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பிளக்ஸ் இல்லா நகரமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக, பிளக்ஸ் வைப்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. துக்க நிகழ்ச்சிகள், வாழ்த்து தெரிவித்தல், வர்த்தக விளம்பரம் என பலவிதமான பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன.

மேலும், மின்கம்பங்களை ஆக்கிரமித்து பிளக்ஸ்கள் கட்டப்படுகின்றன. காற்றில் ஆடும் இந்த பிளக்ஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கோட்டூர் ரோடு, ஜோதிநகர் ஊத்துக்காடு ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட பிளக்ஸ்கள் அகற்றப்படாமல் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நகரமைப்பு பிரிவு கண்டுகொள்ளாமல் உள்ளது.
மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரும் போது மட்டும், கண்துடைப்புக்கு பிளக்ஸ்களை அகற்றி கணக்கு காட்டுவதுடன் பணியை முடித்துக்கொள்கின்றனர்.நேற்று கூட, எம்.எல்.ஏ., உதயநிதி நடித்த படம் வெளியானதையடுத்து, தியேட்டர் மற்றும் விநாயகர் கோவில் முன் பிளக்ஸ் வைக்கப்பட்டது. ஆளுங்கட்சி என்பதால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றனர். அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கையால் விதிமுறைமீறல் தாராளமாகியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னையில் பிளக்ஸ் சரிந்து விழுந்து, பெண் ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து, ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. பிளக்ஸ் வைக்க மாட்டோம் என, அரசியல் கட்சியினர் ஐகோர்ட்டில் 'அபிடாவிட்' தாக்கல் செய்தனர். அதன்பின் பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது, பொள்ளாச்சி நகரில் கண்டுகொள்வதில்லை.விதிமுறைகள் மீறலை கண்டு கொள்ளாமல் உள்ள அதிகாரிகள், இனியாவது நடவடிக்கை எடுத்தால், அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE