வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என பல விஷயத்தை அவர் செய்துள்ளார்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவின் 31ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: " எனது அப்பா நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டவராக திகழ்ந்தார். இரக்கம், கனிவு உள்ளம் கொண்டவராக இருந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறப்பான தந்தையாக திகழ்ந்தார். அவருடன் வாழ்ந்த காலத்தை நினைந்து பார்க்கிறேன். " எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக, சென்னையில் நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். போபால் விஷவாயு உயிரிழப்புக்கு காரணம் யார்? ஆண்டர்சனை தப்பிக்க வைத்தது யார்? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் கூறியுள்ளார். ஆனால், அவர் யார் எங்களை மன்னிக்க? நீங்கள் செய்த கொடுஞ்செயல்களை நாங்கள் மன்னிக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கண்டனம்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: சீமான் சொல்வது போல் முன்னாள் பிரதமர் ராஜிவ், இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்து கொள்வோம். ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சீமான் என்ன செய்தார்? துடுக்குத்தனமாக பேசுவதை சீமான், நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும். சீறுவது போல் வாயை திறக்கலாம். சீற்றம் வராது. காற்றுதான் வரும். வேடிக்கையாக பேசுவதில் சீமான் வல்லவர். அவர் பேச்சில் வேடிக்கை மட்டுமின்றி, அறியாமையும், பிதற்றலும் இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜிவ்க்கு நற்சான்றிதழ் வழங்கும் உயர்ந்த இடத்தில் சீமான் இல்லை. யார் தியாகி , தியாகி இல்லை என்பதை அவர் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE