வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: தேசிய அளவில் கொள்கை கொண்ட கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகளை மிரட்டும் கட்சியாக செயல்படாது என அக்கட்சி எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்தில் பேசிய எம்.பி., ராகுல், மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையோ இல்லாததால், பாஜ.,வை எதிர்த்து காங்கிரஸால் மட்டுமே போராட முடியும் எனக்கூறியது கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லண்டனில் நடந்த கருத்தரங்கில் பேசிய ராகுல், உதய்ப்பூரில் நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடப்பது கொள்கை ரீதியிலான போராட்டம். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தேசிய அளவில் கொள்கை கொண்ட கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும் நண்பர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளை மிரட்டும் கட்சியாக காங்கிரசை நான் கருதவில்லை. இது எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சி. ஆனால், இந்தியாவை மீட்பதற்கான போராட்டம். கொள்கை ரீதியிலான போராட்டம் என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய கொள்கைக்கும். காங்கிரசின் தேசிய கொள்கைக்கும் இடையில் நடக்கிறது.
ஓட்டுகளை ஒருமுகப்படுத்தியது, மீடியாக்களை ஆதிக்கம் செலுத்தாததால் தான், காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் நடக்கும் போராட்டம் அரசியல் ரீதியான போராட்டம் அல்ல. ஒரு அரசியல் கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமும் அல்ல.

நாம் இப்போது, இந்திய அரசின் நிறுவன கட்டமைப்பை எதிர்த்து போராடுகிறோம். இது ஒரு அமைப்பால் கைப்பற்றப்பட்டு வருகிறது. இது தான் எங்களுக்கு உள்ள ஒரு வழி. நமது நாட்டின் நிறுவன கட்டமைப்பில் இருந்து நமக்கு ஓய்வு கிடையாது. நமக்கு உள்ள ஒரே வழி, பெருமளவில் இந்திய மக்களிடம் செல்ல வேண்டும். இதனை காங்கிரஸ் மட்டும் செய்ய முடியாது. மற்ற அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி, பிராந்திய பிரச்னைகளில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

அதிக மக்கள் இடையே ஊடுருவிய ஒரு கட்டமைப்பை ஆர்எஸ்எஸ் உருவாக்கி உள்ளதை என்பதை ஏற்று கொள்ள வேண்டும். அது போன்ற கட்டமைப்பை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும். பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போடாத 60 - 70 சதவீத மக்கள் இடையே நாம் இன்னும் தீவிரமாக செல்ல வேண்டும். அதை நாம் ஒன்றாக செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.