சென்னை : ''சுற்றுச்சூழல் பாதுகாப்பை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்,'' என, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.'தேசிய துாய்மையான காற்று' திட்டம் தொடர்பான, இரண்டு நாள் தென் மண்டல பயிலரங்கம், சென்னையில் இன்று துவங்கியது.

இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பயிலரங்கை துவக்கி வைத்து அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது:மத்தியில் பா.ஜ., அரசு அமைந்தது முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
'துாய்மை பாரதம்' திட்டம் போன்றவை, அதன் ஒரு பகுதியே. 'தேசிய துாய்மையான காற்று' திட்டத்தின் வாயிலாக, காற்றின் தரத்தை மேம்படுத்த, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள, 132 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சென்னை, மதுரை, திருச்சி, துாத்துக்குடி ஆகிய, நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் காற்றின் தரம், தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளுக்கு உட்பட்டுள்ளது. காற்று மாசு இல்லாத நகரங்களை உருவாக்க வேண்டும் என்பதில், பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். புகையில்லா வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, தொழிற்சாலை மாசுகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால், காற்று மாசை குறைக்க, மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மக்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமல்ல. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மக்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். அனைவருக்கும் துாய்மையான காற்று என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். காற்று மாசு இல்லாத நகரங்களை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு, இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் லீனா நந்தன், கூடுதல் செயலர் நரேஷ்பால் கங்குவார், தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாணவர்களை சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்த, மூன்று அரசு பள்ளிகள் உள்ளிட்ட, ஆறு பள்ளிகளுக்கு, 'இ- - கம்யூட்' விருதுகளை, பூபேந்தர் யாதவ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கு, தமிழக அமைச்சர் மெய்யநாதன், 'திருக்குறள்' ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலை பரிசாக வழங்கினார். மற்ற சிறப்பு விருந்தினர்கள், புத்தகத்தை உடனடியாக தன் உதவியாளர்களிடம் கொடுத்து விட, பூபேந்தர் யாதவ் மட்டும், அதை கீழே வைக்காமல் படிக்க துவங்கினார். பின்னர் பேசும்போது, ''திருக்குறள் மிகச் சிறந்த நுால், இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான நுால்,'' என புகழ்ந்துரைத்தார். பா.ஜ., வரலாற்றை ஆய்வு செய்து, 'தி ரைஸ் ஆப் தி பி.ஜே.பி.,' என்ற நுாலை எழுதியவர், பூபேந்தர் யாதவ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE