தமிழக பா.ஜ.,வை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த மூன்று மாதத்தில் ௧௮க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.,வை எதிர்க்கும் பிரதான கட்சியாக பா.ஜ., மாறியுள்ளது. தமிழக அரசு மற்றும் தி.மு.க.,வின் செயல்பாடுகள் அனைத்தையும் உடனுக்குடன் விமர்சிக்கும் அண்ணாமலை, மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ., தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையிடம், பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் கூறியதாவது: லோக்சபாவுக்கு ௨௦௨௪ல் நடக்க உள்ள தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழக சட்டசபைக்கு ௨௦௨௬ல் நடக்க உள்ள தேர்தலிலும், நல்ல வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் நலப்பணிகள் பற்றி, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க., அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். மேலும், பா.ஜ.,வை வலுப்படுத்தும் நோக்கில், தமிழகத்துக்கு வாரம் ஒரு மத்திய அமைச்சர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இங்கு வரும் மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் பணிகளை மட்டும் பேசாமல், அரசியல் ரீதியாகவும் பேசுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்துக்கு கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார். இந்த மாத துவக்கத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும், நேற்று முன்தினம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தமிழகம் வந்தனர். அடுத்த மாதம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வர உள்ளார். தமிழகத்தில் ௨ லட்சம் கோடி ரூபாயில் மத்திய அரசு அமைத்து வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை அவர் பார்வையிடுகிறார்.
அடுத்து வரும் மூன்று மாதங்களில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட, ௧௮க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர்.உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, ௨௬ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது, 'தி.மு.க., தான் நம் பிரதான எதிரி; தி.மு.க., அரசை எதிர்த்து தீவிரமாக பணியாற்ற வேண்டும்' என, மாநில நிர்வாகிகளிடம் பிரதமர் வலியுறுத்துவார்.
கூடுதல் கவனம் செலுத்த திட்டம்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இரண்டு நாள் பா.ஜ., தேசிய நிர்வாகிகள் கூட்டம், நேற்று முடிந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் சார்பாக பங்கேற்றனர்.கூட்டத்தில் அறிக்கை அளித்த அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பெற்றது குறித்தும், பிரதான எதிர்க்கட்சியை போல, ஆளும் தி.மு.க., அரசை எதிர்த்து குரல் கொடுப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில், 2019- லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை. எனவே, 2024- லோக்சபா தேர்தலில், இந்த மூன்று மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.,க்களை பெறும் வகையில், கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 1996 லோக்சபா தேர்தல் முதல், பா.ஜ., கணிசமான ஓட்டுகளை பெற்று வரும் கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென் சென்னை, வேலுார் உள்ளிட்ட தொகுதிகளில் இப்போதிருந்தே, 100 சதவீதம் ஓட்டுச்சாவடி கமிட்டிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நாடார், கொங்கு வேளாளர் சமுதாயத்தின் ஆதரவை பெற்றது போல ஆதிதிராவிடர், வன்னியர், தேவர், முத்தரையர், யாதவர் உள்ளிட்ட சமுதாயங்களின் ஆதரவை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோர் வலியுறுத்தினர்.
- புதுடில்லி நிருபர் -