விலைமதிப்புள்ள ஆற்று மணலை எடுக்க பலர் போட்டா போட்டி போட்டு வரும் நிலையில், குண்டாற்றில் ஊரை ஒட்டி ஒரு கைப்பிடி அளவு மணலை கூட யாரும் எடுத்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர் இலுப்பையூர் கிராமமக்கள்.
நரிக்குடி இலுப்பையூரை ஒட்டி ஓடும் குண்டாற்றில், 25 அடி ஆழம் வரை மணல் உள்ளது. அக்கிராமத்தினர் ஒன்றுகூடி, எல்லை பகுதியான 2 கி.மீ., தூரம் வரை, ஒரு கைப்பிடி அளவு மண்ணை கூட யாரும் எடுத்து விட முடியாதபடி பாதுகாத்து வருகின்றனர். இன்றளவும் ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கின்றனர்.அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சீராக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது கிடையாது. தங்கத்தைப் போல விலைமதிப்புள்ள மணல்களை சுரண்ட பலர் போட்டா போட்டி போட்டும், ஒற்றுமையுடன் செயல்பட்டு, யாரும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பதால் அதிசய கிராமமாக உள்ளது.பொன்னையா, ஊர் பெரியவர்: குண்டாற்றில் அளவு கடந்த மணல்கள் கிடந்தன. பல்வேறு ஊர்களில் மணல்கள் சுரண்டப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. இப்பிரச்னை எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது என கருதி, ஊர் ஒன்று கூடி, குண்டாற்றில் யாரும் ஒரு கைப்பிடி அளவு மணலை கூட எடுத்து விடக் கூடாது என உறுதி ஏற்றோம். என்ன பிரச்னை ஏற்பட்டாலும் மணல் விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்து, அதனடிப்படையில் இங்குள்ள மணலை பாதுகாத்து வருகிறோம். இங்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது கிடையாது. மணல் இருப்பதால் மட்டுமே ஆறு இருப்பதற்கான அடையாளம் தெரிகிறது. மற்ற பகுதிகளில் ஆற்றில் உள்ள மணல்கள் சுரண்டப்பட்டதால், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஆறு இருந்த அடையாளமே தெரியாமல், எலும்புக் கூடாய் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும், என்ன பிரச்னை ஏற்பட்டாலும் விலை மதிப்புள்ள மணலை எடுக்க மட்டும் யாரையும் அனுமதிக்க மாட்டோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE