புதுடில்லி : வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களுக்கு சென்று, அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தும் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
போராட்டம்
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க சந்திரசேகர ராவ் தீவிரமாக உள்ளார். இதற்காக, சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.இதையடுத்து தேசிய அளவில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக, சந்திரசேகர ராவ் டில்லி வந்தார்.

இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சந்திரசேகர ராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவை நேற்று சந்தித்தார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்திக்க உள்ளார்.
மனநிலை
இதைத் தொடர்ந்து, 26ம் தேதி பெங்களுரு சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து மஹாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தி சென்று சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேயை சந்திக்கிறார். அடுத்து, 29, 30ம் தேதிகளில் மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களுக்கு சென்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிதிஉதவி வழங்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவின் இந்த முயற்சிகள் எல்லாமே, காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையாகவே உள்ளது. காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க, அவர் விரும்பவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் இதே மனநிலையில் உள்ளனர். இதைப் பயன்படுத்தி, பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக பலமான கூட்டணியை கட்டமைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். இதற்காகவே சந்திரசேகர ராவின் இந்த அதிரடி சுற்றுப் பயணம் அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE