சென்னை : 'தமிழர் பாரம்பரியம், கலாசாரத்தை, தி.மு.க., அழிக்க நினைக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுர ஆதீனகுரு பூஜை தினத்தில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தி.மு.க., அரசு, ஒருதலைபட்சமாக, அதற்கு தடை விதித்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பா.ஜ., கடும் கண்டனத்தை தெரிவித்தது.'ஆதீனத்தின் பல்லக்கை நானே தோளில் சுமப்பேன்' என்று நான் அறிக்கை விடுத்திருந்தேன்.எடுத்தேன், கவிழ்த்தேன்என்று முடிவுகளை எவரையும் ஆலோசிக்காமல் எடுத்து விட்டு, எதிர்ப்புகள் வந்ததும் சர்ச்சையில் ஈடுபட்டு, மக்களை திசை திருப்புவதே, தி.மு.க., ஆட்சியின் திராவிட மாடல்.தி.மு.க., தன் திராவிட மாடலாக, தமிழரின் தனித்துவம், அடையாளம், மானம், பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, மேன்மையை அழித்து விட்டு, அதை திராவிடம் என்ற பொது பண்பில் அடைக்க நினைக்கிறது.
தமிழர் மானம் காக்க, தமிழக பா.ஜ., தலைமை ஏற்று வருகிறது. தாமரை சொந்தங்கள் எல்லாம் தங்கள் படை திரட்டி வாருங்கள். நாளை நாம் அனைவரும் தருமை ஆதீனத்தில் ஒன்று கூடுவோம். குருமகா சன்னிதானத்தை தோளில் சுமப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.