சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை அளிக்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில், நாளை மறுநாள், 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
உயர் கல்வியில் என்ன படித்தால், எதிர்காலம் சிறப்பாகும் என்பது குறித்து, பல்துறை நிபுணர்கள் பங்கேற்று, வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிக்க ஆலோசனை அளிக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், நாளை மறுநாள், 24ம் தேதி துவங்க உள்ளது. 25 மற்றும் 26ம் தேதிகளிலும், இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மூன்று நாட்களும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை, வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும். மேலும், ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களின் ஆலோசனை அரங்குகளும், மாலை வரை செயல்படும்.
விரிவான தகவல்கள்
உயர்கல்வியில் சேர்வது தொடர்பாக, இந்த நிகழ்ச்சியில் முன்னணி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் நேரடியாக பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.மருத்துவம், இன்ஜினியரிங், கலை, சட்டம், வேளாண்மை, கணினி அறிவியல், வணிகம், தணிக்கை, மல்டிமீடியா உட்பட பல்வகை படிப்புகள் குறித்து, விரிவான தகவல்களை, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
எந்த படிப்புக்கு என்ன வேலைவாய்ப்பு கிடைக்கும்; படிக்கும்போதே வளர்க்க வேண்டிய வேலைவாய்ப்பு திறன்கள்; கூடுதல் படிப்புகள் ஆகியவை குறித்தும், நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும், பல்வேறு உயர்கல்வியில் சேர்வதற்கான, நீட், கியூட், கிளாட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும். வங்கிகளில் கல்வி கடன் பெறும் முறை குறித்தும், நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
மாணவர் சேர்க்கை
நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அரங்கிலும், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்கள் நிறுவனத்தில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அதற்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறை, கல்வி கட்டணம் ஆகியவை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து பெற, www.kalvimalar.com/ என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், தங்களின் பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.காலை மற்றும் மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி அரங்கில் மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சரியான பதில் அளிப்பவர்களில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முக்கிய 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டாட் ஸ்கூல் ஆப் டிசைன், வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஷிவ் நாடார் பல்கலை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், உயர்கல்வி சார்ந்த முன்னணி நிறுவனங்களின் வல்லுனர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர்.
நாட்டின் முன்னணி உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி, இந்திய நிலவு மனிதர் எனப்படும், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர், அறிவியல் தொழில்நுட்ப படிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு விரிவான தகவல் அளிக்க உள்ளனர்.உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, நுழைவு தேர்வு குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், சிறந்த படிப்புகள் குறித்து, பிரேமானந்த் சேதுராஜன், லட்சிய படிப்புகள் குறித்து தைரோகேர் தொழில்நுட்ப நிறுவனர் டாக்டர் வேலுமணி, தொழில் முனைவோர் ஆவது குறித்து, தொழிலதிபர் குமரவேல், சி.ஏ., படிப்பு குறித்து ஆடிட்டர் சேகர்; தொழிற்துறை வாய்ப்புகள் குறித்து, தொழில்துறை வல்லுனர் செந்தில் ராஜா ஆகியோர் ஆலோசனை அளிக்க உள்ளனர்.
அதிக வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா; ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில், வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு குறித்து ஐ.டி., துறை நிபுணர் சுஜித்குமார், கல்வி கடன் பெறுவது குறித்து, வங்கியாளர் விருத்தாசலம், அரசு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசகர் நித்யா ஆகியோரும், ஆலோசனைகள் வழங்குவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE