காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் புதிய புறக்காவல் நிலையத்தை வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஐ.ஜி., பேசியதாவது:புறக்காவல் நிலையத்தில் ஐ.பி., தொழிற் நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றங்களை தடுப்பதற்கு இது போன்ற நடவடிக்கை காவல் துறைக்கு தேவை. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து அதற்கான பணியை காவல் துறையினர் செய்ய வேண்டும். காஞ்சிபுரம் சிறிய மாவட்டமாக இருந்தாலும் வடக்கு மண்டலத்தில் ஒரு உதாரணமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்தியபிரியா, எஸ்.பி., சுதாகர், டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர் ஆகியோர் பங்கேற்றனர்.
குற்றவாளிகளை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது புறக்காவல் நிலையம் பல்லவர்மேடு பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.