திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் உட்பட, 29 கோவில்களில், இயந்திரம் வாயிலாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சேவை கட்டண டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப் படுகின்றன.
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக மொத்தம், 28 உபகோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், தினசரி நடைபெறும் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் சேவை கட்டணங்கள், புத்தகம் வாயிலாக ரசீதுகளாக வழங்கப்பட்டு வந்தன.மேலும், மேற்கண்ட சேவைகள், அபிஷேகத்திற்கு பக்தர்கள் ரொக்கமாக செலுத்தி டிக்கெட்டுகள் பெற வேண்டியிருந்தன.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, 'டெபிட், கிரெடிட் கார்டுகள்' வாயிலாக அபிஷேகம், அர்ச்சனை மற்றும் சேவை டிக்கெட்டுகள் வழங்க, கையடக்க கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த இயந்திரம் வாயிலாக மேற்கண்ட டிக்கெட்டுகள் வழங்கப் படுகின்றன.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி முருகன் கோவில் உட்பட மொத்தம், 29 கோவிலுக்கு அர்ச்சனை, அபிஷேகம் போன்ற டிக்கெட்டுகள் வழங்க, 46 கருவிகள் அந்தந்த கோவில் பொறுப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளன.
அன்னதானம் வழங்கப்படும் ஆறு கோவில்களுக்கு மட்டும் கையடக்க கருவிகள் மற்றும், கம்ப்யூட்டர் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.இந்த கருவியில், கார்டுகள் வாயிலாக டிக்கெட் பெறும் வசதியும் உள்ளது.இருப்பினும், சில நாட்கள் பக்தர்கள் பணம் கொடுத்து தான் வாங்க முடியும். காரணம், ஒரு வாரத்திற்குள் கருவிகள் 'அப்டெட்' செய்யப்படும். பின், கார்டுகள் வாயிலாக டிக்கெட் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.