திண்டிவனம்:திண்டிவனம் அருகே டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டிவனத்தில் 17 தேர்வு மையங்களில் நேற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2-ஏ தேர்வு நடந்தது. இதில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பி.வி.பாலிடெக்னிக் கல்லுாரி மையத்தில் காலை 9:00 மணிக்குப் பிறகு, 14 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர்.தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் 30 நிமிடம் தாமதமாக வந்ததால், 14 பேருக்கும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரி எதிரே திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் காலை 9:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரோஷணை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் 9:45 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களிடம், சப் இன்ஸ்பெக்டர், தேர்வு நடைமுறை குறித்து விளக்கம் அளித்து, அதிகாரிகள் மறுத்து விட்ட தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.