இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: காங்., பிரமுகர், மகன் சிறையில் அடைப்பு| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: காங்., பிரமுகர், மகன் சிறையில் அடைப்பு

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | |
தமிழக நிகழ்வுகள்:நெல்லை கல் குவாரி விபத்து வழக்கு காங்., பிரமுகர், மகன் சிறையில் அடைப்புதிருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் தமிழக காங்., துணைத்தலைவர் செல்வராஜ், மகன் குமார் நடத்தி வரும் வெங்கடேஸ்வரா கிரஷர் குவாரியில் மே 14 இரவில் பாறைச் சரிவு ஏற்பட்டதில், ஆறு பேர் சிக்கினர். இதில் முருகன், விஜயன் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம்,
 இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: நெல்லை  கல் குவாரி,சிறை


தமிழக நிகழ்வுகள்:
நெல்லை கல் குவாரி விபத்து வழக்கு காங்., பிரமுகர், மகன் சிறையில் அடைப்பு


திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் தமிழக காங்., துணைத்தலைவர் செல்வராஜ், மகன் குமார் நடத்தி வரும் வெங்கடேஸ்வரா கிரஷர் குவாரியில் மே 14 இரவில் பாறைச் சரிவு ஏற்பட்டதில், ஆறு பேர் சிக்கினர்.
இதில் முருகன், விஜயன் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், செல்வகுமார் முருகன் மூவர் இறந்துவிட்டனர். ராஜேந்திரன் உடல் பாறைகளுக்குள் சிக்கியிருப்பதால், 7-வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது.
டிப்பர் லாரியின் கீழ் சிக்கியிருக்கலாம் என்பதால், நேற்றும் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தனர். உடைந்த பாறைகளை அப்புறப்படுத்தி உடலை தேடினர். இரவிலும் தேடும் பணி தொடர்ந்தது.
இந்த சம்பவத்தில் உரிமையாளர் செல்வராஜ், மகன் குமார், குத்தகைதாரர் சங்கரநாராயணன், மேஸ்திரி ஜெபசிங் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கரநாராயணன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெபசிங் சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த செல்வராஜ், குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மதியம் 2:30 மணிக்கு முனீர்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்களை அழைத்து வந்தனர். மாலை 4:00 மணியளவில் மாஜிஸ்திரேட் திரிவேணி முன் ஆஜர்படுத்தினர்.


latest tamil news
இருவருக்கும் உடல் பரிசோதனை மேற்கொள்ள மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்நடந்த பரிசோதனைக்குபின் இருவரையும் ஜூன் 3 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இறந்த முருகன், செல்வம்,செல்வகுமார் ஆகியோர் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு இறந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றும் முருகன், செல்வம் குடும்பத்தினர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுவரை உடல்களை வாங்கவில்லை.


தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை கொன்றவர் கைது

ஆம்பூர்,:ஆம்பூரில், பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர், தன் மனைவி என நினைத்து, அடுத்தவர் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.திருவண்ணாமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 50; மாடு அறுக்கும் தொழிலாளி. இவர் மனைவி ரேணுகாம்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த விதவை பெண் தனலட்சுமி, 35, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தேவேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்ததால், கோபித்துக் கொண்டு தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து, நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் தங்கினார். இங்கு இவரைப் போல நிறைய ஆதரவற்றோர் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, ஆம்பூர் வந்த தேவேந்திரன், மனைவியை தேடி கண்டுபிடித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். தனலட்சுமி வர மறுத்து, தேவேந்திரனை
விரட்டினார்.ஆத்திரமடைந்த தேவேந்திரன், மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் மாடு அறுக்கும் கத்தியுடன் ஆம்பூரில் சுற்றிக் கொண்டிருந்தார். நேதாஜி சாலை பிளாட்பாரத்தில், சக பெண்களுடன் தனலட்சுமி இரவு, 10:00 மணிக்கு படுத்து துாங்கினார்.
நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார். துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடியில் இருந்து தப்பிக்க, முகத்தை மூடியவாறு துாங்கிக்
கொண்டிருந்தனர். இதில், துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து, தேவேந்திரன் கத்தியால் குத்தினார். அந்த பெண் அலறியடித்து எழுந்து ஓட முயன்ற போது, மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.
கத்திக்குத்து வாங்கி, அவர் சரிந்து விழுந்த பின் தான், அப்பெண் தனலட்சுமி இல்லை என்பதே, தேவேந்திரனுக்கு தெரிந்தது. பின்னர் தேடியதில், அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமியை கண்டுபிடித்து, அவரையும் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து நையபுடைத்து, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், ஆம்பூர், கம்பிக்கொல்லையைச் சேர்ந்த நவீத், 30, மனைவி கவுசர், 27, என, தெரியவந்தது. திருட்டு வழக்கில் கைதான நவீத், வேலுார் சிறையில் அடைக்கப்
பட்டுள்ளார். இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டதால், நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தது தெரியவந்தது.தன் மனைவி குறட்டை விட்டு துாங்குவார் என்பதால், அங்கு குறட்டை விட்டு துாங்கிய கவுசரை, தன் மனைவி என நினைத்து குத்திவிட்டதாக, தேவேந்திரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

*****************


இந்தியா நிகழ்வுகள்:தேசிய பங்குச் சந்தை மோசடி 10 இடங்களில் சி.பி.ஐ., சோதனை

புதுடில்லி:என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக, டில்லி மும்பை உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை
நடத்தினர்.தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது பல மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக, 'செபி' எனப்படும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தியது.இதில், ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு ஆலோசகராக நியமித்ததில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு அதிக சம்பளம், பதவி உயர்வு, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இமயமலையில் உள்ள ஒரு யோகியின் உத்தரவின்படியே, இந்த சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மும்பையில் என்.எஸ்.இ., அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் தகவல்களை சேமிக்கும், 'சர்வர்' அமைப்பை தனியார் பங்குச் சந்தை தரகு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி
அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பங்குச் சந்தை நிலவரம் தொடர்பாக முதலில் அவர்களுக்கு தகவல் கிடைத்து வந்தது. இதில் பல மோசடிகள் நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து
உள்ளது.இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வரை பகிர்ந்து கொண்டதன் வாயிலாக மோசடிகளில் ஈடுபட்ட பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் மற்றும் செபி அதிகாரிகளுக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மும்பை, டில்லி, காந்தி நகர், கோல்கட்டா, நொய்டா உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.

********************


உலக நிகழ்வுகள்:மேலாடையின்றி உக்ரைன் பெண் 'கேன்ஸ்' விழாவில் பரபரப்பு

கேன்ஸ், 'கேன்ஸ்' திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பின்போது, உக்ரைனைச் சேர்ந்த பெண், மேலாடையின்றி நுழைந்தது பரபரப்பை
ஏற்படுத்தியது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரின்போது, சிறுமியர் உட்பட இளம் பெண்களை ரஷ்யப் படையினர் பாலியல் பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில், பல நாட்டு திரை பிரபலங்கள் வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், தன் மேலாடையை கழற்றி விட்டு சிவப்பு கம்பளத்தில் சென்றார்.
உக்ரைனின் தேசியக் கொடியை உடலில் வரைந்திருந்த அவர், 'எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்' என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

மெஹுல் சோக்சி வழக்கு வாபஸ் டொமினிகன் அரசு திடீர் முடிவு

ரோசாவ், வங்கி கடன் மோசடியில் தலைமறைவான நகை கடை அதிபர் மெஹுல் சோக்சி மீது சட்ட விரோதமாக டொமினிகன் நாட்டில் நுழைந்தது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த நகை கடை அதிபர்கள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, இந்தியாவில் இருந்து தப்பியோடினர்.
இதில், நிரவ் மோடி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மெஹுல் சோக்சி, வட அமெரிக்காவில் இருக்கும் கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
இந்நிலையில் மெஹுல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகன் நாட்டிற்கு சட்ட விரோதமாக வந்ததாக அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில், தன்னை போலீஸ் அதிகாரிகள் வேடத்தில் வந்த சிலர், ஆன்டி குவாவில் இருந்து
கடத்தி வந்து டொமினிகனில் அடைத்து வைத்திருந்ததாக, மெஹுல் சோக்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு 'ஜாமின்' வழங்கப்பட்டது. இந்நிலையில் டொமினிகன் அரசு, மெஹுல் சோக்சி மீதான சட்ட விரோத குடியேற்ற வழக்கை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X