பள்ளி, கல்லுாரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவு செய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். அப்போதுதான் பதிவு மூப்பு அமலில் இருக்கும்.கடந்த மாத நிலவரப்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டிருந்தது.அதன்படி, மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 ஆக உள்ளது. 24 வயது 35 வயது வரையுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை மட்டும் 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆகும்.
அதேபோல், 19 முதல் 23 வயது வரை உள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 ஆக உள்ளது. மொத்த பதிவுதாரர்களில் இளங்கலை படிப்பு மற்றும் பி.எட்., படித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 ஆகவும், முதுகலை படிப்பு மற்றும் பி.எட்., படித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 ஆகவும் அதேபோல், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 470 ஆகவும் உள்ளன.

தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:திருப்பூர் போன்ற நகரங்களில், வேலைவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. இருப்பினும், இளைஞர்கள் பலர், அரசு வேலைவாய்ப்புக்காகத் தான் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். சுய தொழிலுக்கான வாய்ப்புகளையும் புறம் தள்ளிவிடுகின்றனர். அனைவருக்கும் வேலைவாய்ப்பை அரசே ஏற்படுத்தித்தரும் என்பது இயலாதது.அரசு துறைகளை காட்டிலும், அதிக சம்பளம் தரக்கூடிய தனியார் துறைகள் அதிகரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், பல்வேறு துறைகளிலும் மிளிரக்கூடியவர்களுக்கு, சம்பளத்திற்கான வரையறையே கிடையாது.
திருப்பூரில், 20 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும், 10 லட்சம் என்ற அளவுக்கு தான் தற்போது உள்ளனர். புத்தாக்க சிந்தனையுடன் யோசிக்கும் இளைஞர்கள், திருப்பூரில் தொழிற்சாலைகளை நிர்வகிக்கவும், தொழில் துவங்குவதற்குமான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.கடின உழைப்பு, அர்ப்பணிப்புணர்வுடன் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் குறித்த கால இடைவெளிக்கும் வெற்றி கிடைக்கும் என்பது திண்ணம்; வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்வது இளைஞர்கள் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE