சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, தமிழக அரசும் குறைக்க முன்வர வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி
மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை உணர்ந்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாநில வரியில் குறைந்த பட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.9 ம் குறைக்க வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும், வாட் வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால் மக்களின் சுமையைபோக்க, பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முன்வர வேண்டும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். இதனால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் இறங்கவும், ஆட்டோ டாக்சி போன்ற வாகனங்களுக்கான கட்டணங்கள் குறையவும் வழிவகுக்கும். பணவீக்கம் குறையவும் வாய்ப்பு ஏற்படும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி திமுகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. விலை குறைக்கப்படுவதால், வாகன கட்டணங்கள் மேலும் குறையவும், போக்குவரத்து கழகங்களக்கு ஏற்படும் இழப்பு வெகுவாக குறையவும், பஸ் கட்டணம் உயர போகிறது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். மக்கள் நலனை காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE