சென்னையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பங்கேற்க இருந்த, 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' அமைப்பின் கருத்தரங்கமும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக துரை நியமிக்கப்பட்ட பின், அவரது செல்வாக்கை உயர்த்துவதற்கு, இலங்கை தமிழர்கள் விவகாரத்தை, வைகோ கையில் எடுத்துள்ளார். முதற்கட்டமாக, அடுத்தடுத்து இரண்டு கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் சார்பில்,'அரசவை அமர்வு தொடக்க நிகழ்வு' என்ற கருத்தரங்கம், சென்னை தி.நகரில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதில், வைகோ மற்றும் மலேஷியா, பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்டடோர் சிறப்புரை ஆற்ற இருந்தனர். இந்நிலையில், பேரறி வாளன் விடுதலைக்கு பின், அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததற்கு, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், பேரறிவாளனுக்கு ஆதரவாகவும், அவருக்காக, மறைந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிட்ட சம்பவங்களையும் நினைவு கூர்ந்து கருத்தரங்கில் பேசுவதற்கு, வைகோ விரும்பினார்.
அதேபோல், மே 17 இயக்கத்தின் சார்பில், நேற்று சென்னை பெசன்ட் நகரில் நடக்கவிருந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் வைகோ பங்கேற்று, இலங்கை விவகாரம் பற்றியும், காங்கிரசுக்கு எதிராகவும் பேச திட்டமிட்டிருந்தார். 'வைகோவின் பேச்சு சர்ச்சையை உருவாக்கும்; தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும்' என, உளவுத்துறை, ஆட்சியாளர்களை எச்சரித்தது.
அதேநேரத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடத்த அனுமதி தரக் கூடாது என, மத்திய உள்துறை அமைச்சகமும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அந்தக் கூட்டம் நடத்த போலீசார் அனுமதிக்காததால், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்பட்டது.
இதற்கிடையில், 'முள்ளிவாய்க்கால் கூட்டத்தில் நான் பங்கேற்றால், போலீஸ் அனுமதி தராது; அதனால் நான் பங்கேற்கவில்லை. நீங்களே நடத்துங்கள்' என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வைகோ தெரிவித்தார். ஆனாலும், அந்த கூட்டத்தையும் நடத்த, போலீசார் அனுமதி தரவில்லை; ஆனாலும் தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டதால், சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த இரு சம்பவத்தால், ஆளுங்கட்சியினர் தன்னை ஓரங்கட்டுகின்றனரோ என்ற அதிருப்தியில் வைகோ இருப்பதாக, கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE