ஊழலை ஒழிக்க தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வர வேண்டும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர்| Dinamalar

ஊழலை ஒழிக்க தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வர வேண்டும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (81) | |
சென்னை: ''தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்கு பா.ஜ., ஆட்சி மலர வேண்டும்,'' என்கிறார், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.தமிழகம் வந்திருந்த அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:தமிழகத்துக்கு தொடர்ந்து, பல மத்திய அமைச்சர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மத்திய
Bhupender Yadav, BJP, Union Cabinet Minister, Bharatiya Janata Party

சென்னை: ''தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்கு பா.ஜ., ஆட்சி மலர வேண்டும்,'' என்கிறார், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.தமிழகம் வந்திருந்த அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


தமிழகத்துக்கு தொடர்ந்து, பல மத்திய அமைச்சர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமாக இதை கருதலாமா?
தமிழகம் எனக்குப் புதிதல்ல. முதன்முறையாக, 1985ல் தமிழகம் வந்தேன். கன்னியாகுமரி, சிவகாசி, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்றேன். தற்போது, ஸ்ரீபெரும்புதுாரில் புதிய இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட, நான்கு முக்கியமான நிகழ்ச்சிகளுக்காக வந்து உள்ளேன். பல்வேறு திட்டப் பணிகள், தமிழகத்துக்கு மத்திய அரசு வாயிலாக கிடைத்திருக்கின்றன. அவற்றை துவக்கி வைக்கவே, மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குப் பின், மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் உயர்ந்து உள்ளனவா?
கொரோனா காலத்தில் பிரதமர், 'ஆத்ம நிர்பர் பாரத்' என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் வாயிலாக, எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின்படி, புதிய தொழிலாளர் வைப்பு நிதி பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய நிறுவனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், தொழிலாளர் நலத் துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதோடு, மாதாந்திர ஜி.எஸ்.டி., வருவாயையும் பார்த்தால், தொழில் உற்பத்தி பெருகி இருப்பதை அறிய முடியும்.

'இஷ்ரம்' வலைதளத்தைத் துவங்கியுள்ளது எதற்காக?
முதன்முறையாக முறைசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்ய வைக்கும் முயற்சியாகவே, 'இஷ்ரம்' வலைத்தளம் உருவாக்கப்பட்டது. ஆறு மாதங்களில், 7 கோடி பேர், இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், 400 வகையான வேலைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் பதிவு செய்தவர்களோடு, வேறு மூன்று வகையான பட்டியல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, பதிவு செய்தவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதே, எங்கள் திட்டம்.


latest tamil newsஇத்திட்டத்தை எப்படி மேலும் விரிவுபடுத்தப் போகிறீர்கள்?
தற்போது ஒரு அதிகாரப்பூர்வ தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்னென்ன வேலைகளைச் செய்கின்றனர் என்பதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இலவச காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பதிவு செய்பவர்களுக்கு, 'ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களில் வாயிலாக, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. இதன் பயனும் முறைசாரா தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்.

இதில் ஒப்பந்தப் பணியாளர் களும் சேர்க்கப்படுவரா?
ஆமாம்; அத்தகைய பணியாளர்களுக்கும் உரிய சமூக பாதுகாப்பு வழங்க, இந்தச் சட்டங்களில் உரிய வழிமுறைகள் உள்ளன. மேலும், இத்தகைய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. இனி, அவர்கள் கவுரவமாக நடத்தப்படும் நிலையை எட்டுவர். ஜூலை 1 முதல், நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட இருக் கின்றன.

தமிழகத்தில், தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, இந்தச் சட்டங்களை எதிர்த்தது. ஆட்சிக்கு வந்த பின், அச்சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்காக, மத்திய அரசோடு ஏதேனும் கலந்தாலோசனை செய்யப்பட்டதா?
பெரும்பாலான மாநிலங்கள், இந்தச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இவற்றில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை, மாநில அரசுகளும், தொழிலாளர் நல அமைப்புகளும் தான் வெகு காலமாக கோரி வந்தன. அவற்றை ஒருங்கிணைத்து தான் இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளே, இவற்றின் முக்கியத்துவம் கருதி, சட்டங்களை நிறைவேற்றின.

வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசியதால், கோதுமை உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. இதற்கு பருவநிலை மாறுபாடே காரணம் என்று சொல்லப்படுகிறது. உங்கள் துறை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
மத்திய அரசு, இந்த விஷயங்களில் கவனத்தோடு இருக்கிறது. உணவு வினியோகத் துறை, நிலைமையை கண்காணிப்பதோடு, உரிய நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. எத்தகைய மோசமான பருவ நிலை மாறுபாட்டையும் எதிர்கொள்ள, மத்திய அரசு தயாராக இருக்கிறது.

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?
நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. உரிய துறைகளின் ஒத்துழைப்போடு, சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ' திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளனவே? இவற்றை மீண்டும் செயல்பட வைக்க, மத்திய அரசு என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறது?
'தேசிய ஹைட்ரஜன் திட்டம்' மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி ஏற்கனவே தன் முடிவைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், இந்தத் திட்டங்களின் எதிர்காலம் குறித்தும் ஆராயப்படும்.

காவிரி டெல்டாபகுதிகள், பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதில், பல்வேறு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இவற்றை மீண்டும் செயல்படுத்த, மத்திய அரசு ஏதேனும் முயற்சி எடுக்குமா?

தமிழக அரசு என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை அறிந்த பின், அதன் மீது நல்ல முடிவு எடுக்கப்படும்.

திருநெல்வேலியில் சட்ட விரோத கல் குவாரியில், மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் இயற்கை சுரண்டல்களைத் தடுப்பதற்கும், ஏழைத் தொழிலாளர்களை பாது காக்கவும், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
இதில் முக்கிய பிரச்னையே ஊழல் தான். சட்டவிரோத குவாரிகள் நடைபெறுமேயானால், அங்கே மிக மோசமான ஊழல் மலிந்திருக்கிறது என்று அர்த்தம். அதனால், தமிழக பா.ஜ.,வும், எங்கள் தமிழக தலைவரும் இணைந்து, தமிழகத்தில் சுத்தமான ஆட்சியை வழங்க போராடி வருகின்றனர். ஏழை, எளியவர்களே இத்தகைய ஊழல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எங்கள் தமிழக தலைவரே, அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் தான். அதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

தன் நீண்ட கால முயற்சிகளின் வாயிலாக, அவர் ஒரு திறமையான அதிகாரி என்ற புகழை பெற்றுள்ளார். அவர் தம்முடைய அரசு பணியையே, மக்கள் பணிக்காக தியாகம் செய்துள்ளார். அவருக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், எட்டு ஆண்டுகளில் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு சில மாநிலங்கள் இவற்றை முழுமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் இரட்டை இன்ஜினாக ஊழல் நடைபெறுகிறது. இதை எதிர்த்துத் தான், எங்கள் மாநிலத் தலைவர் சோர்வின்றி போராடி வருகிறார். வருங்காலத்தில் நிச்சயம், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரும். அப்போது, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஊழலற்ற நிர்வாகம், ஏழை, எளியவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X